12 அக்., 2009

பயணங்கள்-1: "அழியாநிலை"

அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டரில் அழியாநிலை என்றொரு சிற்றூர். (என்ன ஒரு அற்புதமான பெயர்! அழியாநிலையை அடைவதுதானே வாழ்வின் குறிக்கோள்!) அங்கே நெடுஞ்சாலை அருகே ஒரு அற்புதமான சிறிய ஆஞ்சநேயர் கோவில். பல ஆண்டுகளுக்கு முன் எதிர்பாராதவிதமாக அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்புக்கிட்டியது. உபயம் இனிய நண்பர், முனைவர் வே.சுந்தரம் அவர்களும், எங்கள் நிறுவன இயக்குனர் முனைவர் மீ.இராகவன் அவர்களும், மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பும். (அவர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்).

அங்கு சென்று வழிபட வேண்டும் என்று ஆசை கைகூடாமல் நழுவிக் கொண்டே இருந்தது. நேற்று அருமை நண்பர் எம்.செந்தில்குமார்Justify Full தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் என்னை அங்கு அழைத்துச் சென்று என் ஆசையை நிறைவேற்றி வைத்தார். (அவரும் அவரது குடும்பத்தார் அனைவரும் இறையருளால் சகல நலமும் பெற்று நீடுழீ வாழ்க!)

காலை ஒன்பது முப்பது மணி அளவில் என் வீட்டை விட்டுக் கிளம்பினோம். அழகாபுரி, கண்டனூர், புதுவயல், கல்லூர், கீழாநிலைக்கோட்டை, கே.புதுப்பட்டி, ஆளப்பிறந்தான் (!) என்று போகும் வழியில் சிற்றூர்கள்.

கோவிலில்லா
ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அவ்வையின் பொன்னுரைப்படி வழிநெடுக சிறிய, பெரிய கோவில்கள். (அதிலும் பெரும்பாலும் அம்மன் கோவில்கள். எல்லாம் வல்ல பரம்பொருளை அன்னையின் வடிவில் காண்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது! அன்னை வழிபாடு நம்மவர்களிடையே எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது!!)

வழவழப்பான
அகண்ட தார்ச் சாலை. இயற்கைக் காட்சிகள். இதமான சுகமான வெயில், நண்பர் செந்திலின் அன்பைப்போல. எனது கேமெராவில் மனதிற்குப் பிடித்ததையெல்லாம் பிடித்துக்கொண்டு அங்கங்கே நிறுத்தி நிதானமாகச் சென்றோம். (நண்பர் செந்தில் முப்பத்து ஒன்பது கிலோமீட்டர் (optimum speed) வேகத்தில் வண்டியை சீராக, அலுங்கல் குலுங்கல் இல்லாமல் ஓட்டிச் சென்றார். பல விதத்திலும் இனிமையாக இருந்தது அப்பயணம்.

வழியில் கல்லூருக்கு முன், சற்றும் எதிர்பாராத பெரிய நவீன உணவகம் - ஸ்ரீமயூரி உணவகம். நடுக்காட்டில் அப்படி ஒரு உணவகம் இருந்தது நம்பமுடியாமல் இருந்தது. கொறித்துவிட்டு, தேநீர் அருந்திவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம்.

பதினோரு மணியளவில் அழியாநிலை ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலை அடைந்தோம். அருமையான இயற்கைச் சூழல். உள்ளேயே பூஜைப் பொருட்கள் கடை, சிற்றுண்டிச்சாலை, தண்ணீர் வசதி. முதலில் ஸ்ரீ செல்வ விநாயகரை வணங்கி, ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபடச் சென்றோம். (எங்கே செல்வ விநாயகரைப் பார்த்தாலும் எனக்கு வினோத்தின் நினைவு வரும் - அவன் பெயரின் பிற் பகுதி 'செல்வகணேஷ்').

அங்கே ஸ்ரீ ஆஞ்சநேயரின் திரு உருவச் சிலை இரண்டு. திறந்த வெளியில் சுமார் இருபத்தைந்து அடி உயரமான பிரம்மாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் ஒன்று. கோவிலினுள் சுமார் பத்தடி உயரமான ஆஞ்சநேயர் வடிவமொன்று. இரண்டுமே மனதை விட்டு அகலாது இருக்கின்றன. அங்கே இருந்த ஒரு மணி நேரமும் மனதிற்கு மிகவும் இதமாகவும், இனியதாகவும் இருந்தது. அங்கே ஒரு தியான மண்டபமும் உண்டு. சிறிது நேரம் தியானம் செய்தோம். பூஜை முடிந்து தினமும் காலை பன்னிரண்டு மணி அளவில் பிரசாதமும் தாராளமாக வழங்கப் படுகிறது.

நின்னருளாலே நின் தாள் பணிந்து என்றபடி, ஸ்ரீ ஆஞ்சநேய பகவானே அடுத்த மாதம் குடும்பத்துடன் உன்னை தரிசிக்க அருள் புரிவாய் என்று வேண்டி வந்தேன்.

பயணத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறியபின் வழி நெடுக மேகக் கூட்டங்கள், மரம் செடி கொடிகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் கேமெராவினால் சுட்டேன். குறிப்பிடத்தக்க இரண்டு கீழாநிலைக்கோட்டை கோவில்கள் இரண்டும், சிதிலமடைந்த கோட்டை ஒன்றும். (ஏன் இப்படி சிதைந்து கிடக்கிறது அதன் வரலாறு என்ன? விசாரிக்க வேண்டும்).

கீழாநிலைக்கோட்டையில் நண்பர் செந்தில் 'இளவட்டக்கல்லை' தூக்க முயல்வதை படம் பிடித்தேன். ('இளவட்டக்கல்' என்பது சினிமாக்காரர்களின் கப்சா என்று எண்ணியிருந்தேன் .)

கே
.புதுப்பட்டியில் ஸ்ரீ மாங்குடி சாத்தையனார் கோவில். ஸ்ரீ மாங்குடி சாத்தையன் வல்லம்பர்களின் குல தெய்வம் என்றும், வல்லம்பர்கள் வீட்டில் மாங்குடி என்றோ சாத்தையா என்றோ பெயர்சூட்டப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள் என்று என்னுடன் பணி செய்த நண்பர் கருப்பையா கூறியது நினைவிற்கு வந்தது.

மதியம் ஒன்றரை மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம். (போக வர சுமார் எழுபது கிலோமீட்டர்.) மறக்கமுடியாத இப்பயணத்தில் எடுத்த சில படங்களை இங்கே கீழே பதிவு செய்திருக்கிறேன்.

பயணங்கள்-2: "அழியாநிலை" பயணக் காட்சிகள்


அழியாநிலை ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர்


நண்பர் செந்தில் அவரது வாகனத்துடன்

சிதிலமடைந்த கீழாநிலைக்கோட்டை

செந்தில் 'இலவட்டக்கல்லை' தூக்க முயல்கிறார்.

கீழாநிலைக்கோட்டையில் மண் குதிரைகள் - என் பழைய நண்பர்கள் சிலரை நினைவு படுத்தின.
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், கீழாநிலைக்கோட்டை


ஸ்ரீ அரியநாயகி அம்மன் திருக்கோவில், கீழாநிலைக்கோட்டை




அழியாநிலைக் கோவில் நுழைவாயில்





ஸ்ரீ மாங்குடி சாத்தையன் கோவில், கே.புதுப்பட்டி



10 அக்., 2009

சிந்தனைகள்-1: "எருமைப்பாலை தடை செய்யவேண்டுமா?"

இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். வாகனத்தில் நாம் செல்கையில், எவ்வளவு ஒலி எழுப்பியும் கண்டுகொள்ளாமல் சாலையில் இஷ்டம்போல் வழிவிடாமல் சென்று, நம் பொறுமையை சோதிக்கும் மனிதர்கள். ஆத்திரத்தில் மனதிற்குள் "எருமைமாடு" என்று திட்டிவிட்டு சென்றிருப்போம். ஒழுங்கீனம் என்பது நாட்டில் ஒரு மாபெரும் கலையாக வளர்ந்துவிட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? காபியாகவும், டீயாகவும், மோராகவும், தயிராகவும் உண்ணப்பட்ட எருமைப்பாலின் பாதிப்பா?

இன்னும் மேலே சென்று சிந்திக்கிறேன். நாம் உண்ணும் உணவு நம்மை எந்த அளவிற்கு பாதிக்கின்றது?

காரம் அதிகம் சாப்பிடுபவர்கள் முன்கோபிகளாக இருப்பார்கள் என்றும், உப்பு அதிகம் சேர்ப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்றும் சொல்வதுண்டு.

கீதையைப் புரட்டிப் பார்க்கின்றேன். உணவை மூன்று வகையாக பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. சாத்வீக உணவு, ராஜச உணவு, தாமச உணவு என்று.

காய்கனிகள், அவ்வப்போது சமைத்து உண்ணப்படும் உணவு, அனைத்திலும் மிதம் மற்றும் உடலுக்கு வலிவையும், சக்தியையும் தரும் நன்மை பயக்கும் தன்மை கொண்ட உணவுகள் அனைத்தும் சாத்வீக உணவுகளாகும். சாத்வீக உணவைக்கொள்பவர்கள் சாத்வீக குணங்கள் (பொறுமை, நிதானம் போன்ற உயர் குணங்கள்) கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுவைகள் தூக்கலாக உள்ள உணவு வகைகள், வறுத்தவை, பொரித்தவை, மசாலாக்கள் சேர்ந்தவை ராஜச உணவுகளாகும். ராஜச உணவை அதிகம் கொள்பவர்கள் தேவையில்லாத பரபரப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, தேவையில்லாமல் எப்போதும் ஏதாவது செய்துகொண்டிருப்பவர்கள் போன்ற குணங்களை உடையவர்களாக இருப்பார்கள்.

கெட்டுப்போன, மக்கிப்போன, பழைய உணவு, சுத்தமில்லாத உணவு, உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவு போன்றவை தாமச உணவுகளாகும். தாமச உணவைக் கொள்பவர்கள் மந்த புத்தி உள்ளவர்களாகவும், சிந்தனையில் தெளிவில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இன்னும் உணவைத் தயாரிப்பவர்களின் மன நிலை, பரிமாறுபவர்களின் மன நிலை, உண்ணும் சுற்றுச் சூழல் இவை அனைத்தும்கூட உண்ணுபவர்களிடம் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இயற்கை மருத்துவம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காய்கனிகள், சமைக்காத உணவுகள், அமிலத்தன்மையில்லாத உணவுகள் போன்றவற்றை பரிந்துரைக்கின்றது.

வரும் நாட்களில் உணவைப்பற்றி இன்னும் பார்க்கலாம்.

பாரதிதாசன் கவிதைகள்-11: "எங்கெங்கு காணினும் சக்தியடா!"

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

(பாவேந்தரின் 'எங்கெங்கு காணினும் சக்தியடா"-விலிருந்து ஒரு பகுதி)

மேகமே மேகமே-14:

Posted by Picasa

படித்தேன்-1:

iWoz -
Steve Wozniak-ன்
சாதனை வரலாறு.
முத்தான
முன்னூறு பக்கங்கள்.
படித்தேன் -
இன்புற்றேன்!
சிலிர்த்தேன்!!
பிரமித்தேன்!!!
இவரால்
வீடெங்கும் PC,
இன்டர்நெட் கனவுகள்.
வாழ்க நீ எம்மான்
என்று பாடலாமா?
இளைஞர்களே!
இளம் பொறியாளர்களே!!
இந்நூலை
அவசியம் படியுங்கள்.
உறுதியாய்
உத்வேகம்
தலைக்கேறும்.
சாதனை படைக்கோணும்
என்ற
வேகம் பிறக்கும்.

(அதே நேரம்
உப்புச் சப்பில்லாத
என் வாழ்க்கையை
எண்ணி
வேதனை.)

2 அக்., 2009

முதியோர் தின பிரார்த்தனை

பிறவிப்பயனை அடைதல் வேண்டும்.
முழுமை பெற வேண்டும்.
மகத்தான சாதனைகள் புரிந்திடல் வேண்டும்.
உரிய நேரம் வந்தவுடன் முழு மனதோடு, இன்முகத்தோடு, மலர்ந்த முகத்தோடு, சிரித்த முகத்தோடு நின் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.
இயலாமை, முதுமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகுமுன் இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்.
தேவையில்லாமல் இந்த உடலின் மீதோ, உயிரின் மீதோ, உற்றார் மீதோ, உறவினர் மீதோ, பொருட்கள் மீதோ அல்லது வேறெதென் மேலோ கடும்பற்றுக் கொண்டு துன்பப் படக்கூடாது, துயரப்படக் கூடாது.
முக்கியமாக அடுத்தவர்களைத் துன்பப் படுத்தக்கூடாது, துயரப் படுத்தக்கூடாது.
கருணை காட்டு தாயே! நல்லருள் புரிவாய் அம்மா!
சரணம், சரணம், சரணம்!

இன்றைய சிந்தனைக்கு-81;

சென்ற இடத்தில் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனதை அதன் போக்கில் விடாமல், நல்லவற்றின்பால் மட்டுமே ஈடுபடச் செய்வது அறிவு.

நினைத்துப் பார்க்கிறேன்-9: "முதியோர் தின சிந்தனைகள்"

அறுபதைத் தொட்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்று, 'பெரிசுகளின்' பட்டியலில் சேர்ந்துவிட்டேன். (செட்டிநாட்டுப் பகுதியில் வாஞ்சையோடு 'ஐயா', நெல்லைப் பகுதியில் எகத்தாளமாக 'பாட்டையா', மதுரைப் பகுதியில் மரியாதையோடு 'பெரிசு').

முதுமையில் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அவற்றோடு என் கருத்துக்களையும் இணைத்து இங்கே எழுதுகிறேன்.

நேரமேயில்லை என்று ஓடிக்கொண்டிருந்த காலம் போய், பலருக்கு நேரத்தை என்ன செய்வது என்ற பிரச்சினை. என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

அதிகாலை எழுந்து தியானம், உடற்பயிற்சி, பிரார்த்தனை, மனம் ஒன்றினால் பஜனை, காலையும் மாலையும் திறந்த வெளியில் சென்று நடந்து வருவது, இயற்கையை ரசிப்பது, கோவில்களுக்கு சென்று வருவது, விரும்பிய புத்தகங்களை, அதிலும் உற்சாகமூட்டும் சீரிய சிந்தனைகள் கொண்டவற்றை, தேடிப் படிப்பது, இன்டர்நெட்டில் தேடித் தேடி நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வது, நமக்கென்று 'வலைப்பூக்களை' உருவாக்கி சிறந்தவற்றை, சீரியவற்றை அவற்றில் பதிவு செய்வது, 'ஆர்குட்' போன்ற சமுதாய இணையங்களில் பழைய மற்றும் புதிய நண்பர்களோடு உரையாடுவது, சிரமமில்லாத பயணங்களை மேற்கொள்வது, குழந்தைகளோடு விளையாடுவது-பொழுதுபோக்குவது, அவர்களுக்கு நல்ல விஷயங்களை கதைகள் மூலம் சொல்லித்தருவது, வீட்டில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்படுவது, நல்ல 'Hobby' ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது (நான் புதிய கேமரா ஒன்றை வாங்கி, மனதிற்கு பிடித்தவற்றைஎல்லாம் 'கிளிக்' செய்கிறேன்) - இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தேவையில்லாமல் மனதைத் தளரவிடாது இப்படி நமது மனதிற்கும், 'பர்சுக்கும்' ஏற்ற பல விஷயங்களைச் செய்யலாம்.

சில எச்சரிக்கைகள்:

1. வீட்டிலும் வெளியிலும் நாம் சொல்வதுபோல் மற்றவர்கள் குறிப்பாக மனைவி மக்கள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரச்சினை பண்ணாமல் இருக்கவேண்டும். மனத்தில் தோன்றும் கருத்துக்களை சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவதே மரியாதை. நாம் வளர்ந்த-வாழ்ந்த காலங்கள் வேறு, அவர்கள் வாழ்கின்ற காலம், கருத்துக்கள் வேறு. இதை மனதில் கொள்ளவேண்டும்.

2. நமது ஆரோக்கியத்தைப் பேணி, இறுதிவரை நோய்நொடியில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வேறுவகையில் சொல்வதானால், நம் மனைவி மக்களுக்கோ மற்றவர்க்கோ எந்த வகையிலும் சுமையாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

3. வீட்டில் அதுவேண்டும், இதுவேண்டும் என்று கேட்டு நச்சரிக்காமல், எளிய வாழ்க்கை வாழவேண்டும். நமக்கு வேண்டியவற்றை நாமே செய்துகொள்ளவேண்டும்.

4. முடிந்தால் பயனுள்ள, பிரச்சினை இல்லாத சமுதாயப் பணி ஒன்றை மேற்கொண்டு சமுதாயப் பிரக்ஞையோடு செயல்படலாம்.

5. பேச்சைக் குறைத்துக் கொள்ளுதல் அவசியம். வயதானவர்கள் பலருக்கு இந்த தொணதொணக்கும் வியாதி இருக்கிறது. இதனாலேயே நம்மைக் கண்டு பலர் ஓடுவது.

6. முடிந்தவரை நாமாக யாருக்கும் அறிவுரைகள் வழங்காதிருப்பது (பொதுவாக யாரும் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை - நடக்கப் போவதில்லை. தேடிவந்து யாரவது கேட்டால் மட்டுமே - சுருக்கமாகக் கூறலாம்.)

சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல 'மனம் விரிந்துகொண்டே போகவேண்டும்'. இறுதியில் எல்லையற்ற இப்பிரபஞ்சத்தோடு ஒன்றோடு ஒன்றாகக் கலந்திடல் வேண்டும். பிறவிப்பயனை அடைதல் வேண்டும். சாதனைகள் படைத்திடல் வேண்டும். ஆன்மிகத்தில்தான் இவையெல்லாம் கைகூடும், மனமும் அமைதி பெறும். இறுதிவரை வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றை அமைதியுடனும், பொறுமையுடனும் எதிர்கொள்ளும் ஆற்றலையும், மனப்பக்குவத்தையும், அன்புள்ளத்தையும் ஆன்மிகத்தில் மட்டுமே பெறமுடியும். இது என் உறுதியான நம்பிக்கை.

என் வாழ்வில் இவை அனைத்தையும் கடைப்பிடிக்க முயல்வேன். So help me God!

1 அக்., 2009

இன்றைய சிந்தனைக்கு-80:

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

இச்செயலை நம்மால் செய்யமுடியாதென்று தளர்ச்சி அடையக்கூடாது. இடைவிடாத முயற்ச்சியானது அதனைச் செய்துமுடிக்கும் வலிமையைத் தரும்.