17 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-130:

வீண்  பேச்சும்  பொய்யும்  நண்பர்கள். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-35:

கன்றினுக்குச்   சேதா   கனிந்திரங்கல்  போலஎனக்
கென்றிரங்கு   வாய்கருணை  எந்தாய்  பராபரமே.  

யோக சித்தி-49: அறவிரிவு -5

எதுதீதென  நோக்கி  எள்ளற்க;  நன்மை
அது  போற்றல்  ஆற்றலறிவு.

நம்மைத்  தொடர்ந்த  மனித  மனித  சமுதாயத்தினிடம்  நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்?  பிறரிடம்  எது  கெடுதல்  என்று  நோட்டம்  பார்த்து,  குட்ட்ரமே  பாராட்டி  அவர்களை  இகழக்கூடாது.  பிறரிடம்  எது  நன்மை,  எது  உத்தமமான  குணம்  என்று  கவனிக்கவேண்டும்.  அதை  நாமும்  பேணி,  அதன்படி  செய்து,  நன்மை  பெறுதலே  அறிவாகும்.         

16 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-129:

சோம்பல்    ஏழ்மைக்கு  வித்து.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-34:

உள்ளம்  அறிவாய்  உழப்பறிவாய்  நான்ஏழை
தள்ளிவிடின்  மெத்தத்  தவிப்பேன்  பராபரமே.   

யோக சித்தி-48: அறவிரிவு -4

தொடர்ந்தாரின்  துன்பம்  துடைக்காத  செல்வன்
கடமை  வழுவியோன்  காண்.

நாகரிகம்  பெற்ற  செல்வன்,  சுகபோகங்களைச்  சுயனலத்திர்கே  பயன்படுத்தாது,  தன்னைத்  தொடர்ந்த,  தன்னினமான,  மாந்தரின்  துன்பத்தைத்  துடைக்கப்  பயன்படுத்தவேண்டும்.  அவர்களுக்குற்ற  இடர்களைத்  தன்னால்  இயன்ற  மட்டும்  தவிர்க்கவேண்டும்.  இன்றேல்,  அவன்  தனக்குரிய  கடமையினின்று  வழுவியோனாவன்.    

14 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-128:

ஆணவத்தின்  நொண்டிக் குழந்தையே  பொறாமை. 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-33:

கடல்அமுதே  தேனேஎன்  கண்ணே  கவலைப்
படமுடியாது  என்னைமுகம்  பார்நீ  பராபரமே.   

யோக சித்தி-47: அறவிரிவு -3

மோகரிகம்  இன்றி,  முரணற்ற  முன்னேற்றம்
நாகரிகம்  என்றே  நவில்.

நாகரிகம்  என்றால்  என்ன?  மோகரிகம், மனமயக்கம்  இல்லாது,  ஒருவொருக்கொருவர்  முரண்பட்டு,  மாறுபட்டுப்  போட்டி  பொறாமைகளால்  பகைத்துப்  போராடாமல்,  மனித  சமுதாயம்  ஒன்றுபட்டு,  அன்பிலும்  அறிவிலும்  ஆன்ம  உணர்விலும்  வளர்ச்சி  பெரும்  முன்னேற்றமே  நாகரிகம்  என்று  சொல்லுக.   

13 அக்., 2010

சூரியின் டைரி-41: சிற்றிதழ்கள்

சிற்றிதழ்களின்    அரிய இலக்கிய  சேவை  பற்றி  இந்தவலைப்பூவில்  ஏற்கனவே  பதிவு செய்துள்ளேன்.  தமிழ்மணியில்  கலாரசிகன்  அவர்கள்  'புதிய  ஆசிரியன்'  பற்றி  எழுதியதை  அப்படியே   பதிவு  செய்திருந்தேன்,  அவரது  கருத்துக்கள்  என்  உணர்வுகளை  அப்படியே  பிரதிபலிப்பதாக  இருந்ததால்.  சிற்றிதழ்கள்  பற்றி  நிறைய  எழுதலாம்.  என்னுடைய  சொந்த  அனுபவத்திலிருந்து  சிலவற்றை  இங்கே பதிவு செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.

காரைக்குடி  புத்தகத்  திருவிழா  நடத்துவதில்  முக்கிய  பொறுப்பு முதல் நான்கு  ஆண்டுகள்  என்வசம்  இருந்தது.  அந்தகால கட்டத்தில்  சிற்றிதழ்களுக்கென்று  ஒரு  கண்காட்சியோ  மாநாடோ நடத்த பெரிதும்  விரும்பினேன்.  ஆனால்  பல  தடைகள்,  சிரமங்கள்.  அப்போது  நண்பர்,  கவிஞர்  ஜனநேசன்  அவர்கள்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவின்  ஒரு  பகுதியாக  சிற்றிதழ்களின்  கண்காட்சியை  நடத்தலாம்  என்று  ஆலோசனை  கூறினார்.  அதன்படி  2005  ஆண்டு  காரைக்குடி  புத்தகத் திருவிழாவுடன்  சிற்றிதழ்  கண்காட்சியையும்  இணைந்து  நடத்தினோம்.  ஒன்பது நாட்கள் நடைபெற்ற  புத்தகத்  திருவிழாவின்  ஒவ்வொரு  நாளையும்  ஒவ்வொரு  சிறப்பு தினமாக நடத்தும் பழக்கத்தை  வைத்திருந்தோம்.  (ஆசிரியர் தினம்,  மாணவர் தினம்,  மகளிர் தினம்,  சாதனையாளர் தினம்,  அறிவியல் தினம்  என்று).  அந்த  ஆண்டு  ஒருநாளை  'சிற்றிதழ்  தினமாகக்'  கொண்டாடினோம்.

திரு  பொள்ளாச்சி  நசன்  அவர்களைத் தொடர்பு கொண்டு,  அவரை  அன்று  சிறப்பு விருந்தினராக  கலந்து கொள்ள  அழைத்திருந்தோம்.  அவரும்  இசைவு தெரிவித்து,  சிற்றிதழ்களின் முகவரிகளையும் கொடுத்து உதவினார்.  நாங்கள்  அந்த முகவரிகள் அனைத்திற்கும் அழைப்பு அனுப்பினோம்.  எதிர்பாராதவிதமாக  சிற்றிதழ்களின்  மாநாடு  அதே நாளில்  தமிழகத்தின்  வேறு  பகுதியில்  நடைபெற்றதால்  பலர் கலந்துகொள்ள முடியவில்லை.  திரு பொள்ளாச்சி  நசன்  அவர்களும் வரமுடியவில்லை.  இருப்பினும்  கிட்டத்தட்ட  முப்பதிற்கும்  மேற்பட்ட  சிற்றிதழ்கள்  அதில் கலந்துகொண்டன.  'திசை எட்டும்'  மொழிபெயர்ப்பு மாத இதழின்  ஆசிரியரான  திரு  குறிஞ்சி  வேலன்  அவர்கள்  அன்று  சிறப்பு  விருந்தினாராகக் கலந்துகொண்டு  மகிழ்வித்தார்கள்.   சிற்றிதழ் கண்காட்சி மிகச்  சிறப்பாக  அமைந்தது.  ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  அவற்றைப்  பற்றி  அறிந்துகொள்ளும்  வாய்ப்பும்  கிடைத்தது.  வந்திருந்த சிற்றிதழ்களின்  பிரதிநிதிகளும்  மகிழ்ச்சியையும்  நன்றிகளையும்  தெரிவித்து  விடைபெற்றனர்.  மறக்க முடியாத  ஒரு  அனுபவமாக  அது  அமைந்தது.  நண்பர் கவிஞர் ஜனநேசன் அவர்களுக்கும், உதவிய மற்ற அன்பர்களுக்கும், ஆர்வத்தோடு கலந்துகொண்ட சிற்றிதழ்களுக்கும்  எனது மிகத் தாமதமான  நன்றிகள்.  Better late than never!

நிறைய  சிற்றிதழ்கள் விற்பனையாகின.  என்  பங்கிற்கு  நானும்  சிறிது வாங்கினேன்.  பல  அன்பர்கள்  அன்பளிப்பாகத்  தங்கள்  சிற்றிதழ்களை  எனக்கு  பேரன்புடன்  வழங்கினர்.  அலுவலகத்திலும் சரி,  பொது வாழ்விலும்  சரி,  குடும்பத்திலும்  சரி,   குருவி  தலையில்  பனங்காய்  என்பதுபோல்  எனக்கு  நிறைய சுமைகள், பொறுப்புகள்;  பேராசையால்  அளவிற்கு மேல்  எடுத்துப்  போட்டுக்கொண்டு செயல்படும்போது, சிலவை  பின்னர்  பார்த்துக் கொள்ளலாம்  என்று  விடுபட்டுப்  போய்விடும்.  அப்படி  விடுபட்டுப்போன  ஒன்றுதான்  இந்தச்  சிற்றிதழ்களைப்  படித்து  அவர்களுக்கு  எனது  நன்றிகளையும்,  கருத்துக்களையும்  தெரிவித்துகொள்வதும்.  மேலும்  சில  இதழ்கள்  பார்த்த  மாத்திரத்திலேயே  என்னைப்  பெரிதும்  கவர்ந்தன.  அவைகளுக்கு  எனது  சந்தாவை  அனுப்பி  அவைகளுக்கு  ஆதரவு  தெரிவிப்பதுடன்,  அவற்றை  படித்து  இன்புறவும்  செய்யலாம்  என்று  நினைத்திருந்தேன்.  இன்றுவரை  அதில்  எதுவுமே  நடைபெறவில்லை.  ஆனால்  கலந்துகொண்ட  சிற்றிதழ்கள்  பல  நன்றிக்கடிதம்  எழுதின,  தங்கள்  இதழில்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவைச்  சிலாகித்து, எனக்கு  நன்றி  கூறி  கருத்துக்களை  வெளியிட்டிருந்தனர். இத்தனை  ஆண்டுகளுக்குப்பின்  பெட்டி  பெட்டியாக  நான்  சேர்த்து  வைத்திருந்த  புத்தகக்  குவியல்களையும்,  இதழ்களையும்,  மற்ற  ஆவணங்களையும்  பிரித்தெடுக்கும்போது  அந்த  சிற்றிதழ்களில்  சில  வெளிவந்தன.  அவற்றை  பிரித்துப்  படிக்கும்போது  மனம்  கனத்தது,  நெஞ்சில் நெருஞ்சிகள்  உறுத்தின.  திருநாளைப்போவாராக வாழ்ந்திருக்கிறேன், எப்படிப்பட்ட  வாய்ப்புக்களை  இழந்திருக்கின்றேன்  என்று  வேதனைப்படுகிறேன்.  இருக்கட்டும்.  அந்த  இதழ்களில்  ஒன்றான  'காளான்'  என்ற  ஒரு  அற்புதமான  இதழ்  பற்றி  பின்வரும்  நாட்களில்  பதிவு  செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.