30 மார்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-48: "இளைய மகள்"

என்னைத் தெரிகிறதா?

இளைய முகம் தெரிகிறதா?

அன்புக்குக் காத்திருக்கும்

அடியவளைத் தெரிகிறதா?


மின்னல் வகிடெடுத்து

மேகநிலாப் பட்டுடுத்து

சின்ன அடிபதித்து

சிலம்பொலிக்க வருபவள்நான்

பொன்னெடுத்து நிற்பார்க்குப்

பூவைமுகம் தெரியாது

"என்னடிநீ அதிகாரம்"

என்னிடத்தில் பலிக்காது


கற்பனைக்கும் சொற்களுக்கும்

காதல்வரப் பிறந்தவள்நான்

சிற்றிலக்கிய ஓடைத்

திருமணலில் வீடுகட்டி

காலம் உதிர்த்தமலர்க்

கனவுகளைத் தலைசூடி

நீலவிழியால் உவமை

நீல வரைந்தவளாய்


பொன்கம்ப மண்டபத்தில்

புதியுளா வருபவள்நான்

வென்ற மனத்துரவி

வேந்திளங்கோ பணிமகள்நான்

தேவாரப் பெருங்கடலின்

தீர்த்தத்தில் நீராடி

நாவாரவே பருகும்

நாலாயிரச் சுவைநான்

நாலடியில் ஈரடியில்

நாயகிஎன் தாள்பார்த்து

நூலையே காணாது

நொந்தவர்கள் பற்பலபேர்


மேகலைகள் கொஞ்சி

விளையாடும் என்எழிலை

மாகலைகள் எல்லாம்

மண்டியிட்டுப் பார்த்திருக்கும்

கோடிமணி ஆசனம்

குடியாய்நான் இருப்பதில்லை

பாடுபடும் கரங்களிலே

பாக்குவெற்றிலை ஆவேன்

நாற்றுநடும் ராமாயீ

நாவிலோறு தேனாவேன்

ஏற்றம்தொடும் மாசாணி

தொழிலொரு கிளியாவேன்


சாலைகளில் மாட்டுவண்டிச்

சலங்கையிலே கொஞ்சிநிற்பேன்

காலத்தை மிதிக்குமவர்

கண்வீச்சைக் கெஞ்சிநிற்பேன்

களையெடுக்கும் கூந்தலிலே

காற்றுவந்து கதையுரைக்க

விளையுமந்தப் paraich chirumi



















எனக்குப் பிடித்த கவிதை-48: "சருகு"




"ஒளிப்பறவை" எனும் சிற்பியின் இந்த நூல் ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. 24.8.96 அன்று கவிஞர் சிற்பி அவர்கள் கைப்பட நல்லாசி வழங்கி ஒரு வாசகருக்கு எழுதி வழங்கிய சிறப்புப் பிரதி அது. புத்தகப் பிரியர்களுக்கு இது போன்று எதிர்பாராமல் நல்ல புத்தகங்கள் கிடைக்கும்போது லாட்டரி விழுந்ததுபோல் ஒரு மகிழ்ச்சி. இந்த நேரத்தில் நாங்கள் எங்களது மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் மூலம் நடத்திய பாரதி விழாவிற்கு காரைக்குடி வந்து, சிற்பி அவர்கள் சிறப்புரையாற்றி, செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தளித்ததை நினைத்துப் பார்க்கிறேன். இந்நூலிலிருந்து எனக்குப் பிடித்த கவிதையொன்று:

சருகு

வாழ்க்கைப் புத்தகம் விரிந்து கிடந்தது
வரிக்கு வரி படித்தேன்
வளர்ந்தது வளர்ந்தது முடிவே இல்லை
உணர்ந்தவன்போல் நடித்தேன்

சொட்டும் மழைத்துளி ஒன்றின் சரித்திரச்
சூத்திரம் அறியாதேன்
வட்டமிட் டலைந்து பூமியை அளந்து
முடித்தவன்போல் திரிந்தேன்.

அருகம் புல்லின் பச்சை மொழிக்கோர்
அரும்பொருள் தெரியாமல்
இருளின் குரலும் ஒளியின் பேச்சும்
இவையெனக் கூறுகின்றேன்

நாதப்புனலில் மோதிடும் ஆன்மா
கதறுதல் உணராமல்
காதற்கனவின் பேதைப் புலம்பல்
கதையை அளக்கின்றேன்

ஆளைமுகட்டில் கோலமிடும் புகை
அடிவாரக் கனலைச்
சோலை நிழலின் சுகத்தில் இருந்து
சோடனை புரிகின்றேன்

இயந்திர உலகம் இருகரம் நீட்டும்
இயற்கை முந்திவரும்
மயக்கிடும் நெரிசல் வேகத்தில் எனது
மனதைப் பிளந்துவிடும்!

சுவடுகள் பதிக்கும் காலத்தை ஓடித்

தொடநான் விரைவேனோ!
தவிடாய் உமியாய்க் கவிச்சருகு உதிர்த்து
வெறுமையில் கரைவேனோ?

21 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-67: "பூக்களைப் பறிக்கலாம்"

பூக்களைப் பறிக்கலாம்

பூஜைக்கு, பூவையரின் குழலுக்கு,
மாலையாய் திருமணத்திற்கு,
மலர்க்கொத்தாக வாழ்த்த,

மலர் வளையமாக அஞ்சலி செலுத்த,
ஜாடிகளை அலங்கரிக்க, காதுகளில் சுற்ற,
பூமாரி பொழிய, மலர் மஞ்சமாக,
வாசனை திரவியமாக - என்று

மலர்கள் இத்தனை பலன் தர,
பூக்களைப் பறிக்கக் கூடாது
என்று சொல்லுமுன்,
கேட்டீர்களா அது பூவிற்கும்
சம்மதம் தானா என்று?

செடியிலேயே செத்துப்போக
சத்தியமாய் மலருக்கு
சம்மதம் இருக்காது.

மதுவை மட்டும் எடுத்துக்கொண்டு ,
மலர்களை தேனீக்கள்
செடியிலேயே விட்டுச் செல்ல,

வாசனையை மட்டும்
தன்னோடு எடுத்துக்கொண்டு,
காற்றோ, மலர்களை உதிர்த்துச் செல்ல,
தொலைவிலிருந்தே வண்ணங்களை
சூரிய, சந்திரர்கள் ரசித்துப் போக,
மனிதன் கண்ட பயன்பாடு மட்டுமே
மலர்களுக்கு பெருமை சேர்க்கும்.

நேசிக்கும் பூக்களை
செடியிலேயே விட்டுவிடுவது,
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமையாக இருக்கலாம்-
ஆனால் மலர்களுக்கு அல்ல.

செடிக்கு மலர் என்பது
வயதுக்கு வந்த மகள்;
மகளை தன்னுடனேயே
வைத்துக்கொள்ள
விரும்புவாளா தாய்?

மனிதனுக்கு கிடைத்த
வரங்கள் மலர்கள்;
வரங்களை வீணாக்கலாமா?
பூக்களைப் பறிப்போம்
அவை பிறந்த பயன் எய்த.

20 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-66: "கதை கேளு, கதை கேளு!"

கதை கேளு, கதை கேளு!
(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)

ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.

அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
( ............ .............. ................. )


தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.

மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.

வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
......
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!

கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

18 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-65: "கூலி"

கரும்பை அல்ல
கரும்புச் சாற்றை,
இஞ்சி எலுமிச்சை சேர்த்து
நுரையுடன் நீட்ட,
அருந்தி முடித்தவுடன்
வெள்ளித்தட்டில் வைத்து
பணம் கொடுத்தார்கள்,
காரணம் புரியாவிட்டாலும்
பெற்றுக்கொண்டான் மகிழ்வுடன்.

தலை வாழை இலை போட்டு
ஒவ்வொரு வேளையும்,
எப்படித்தான் துப்பு கிடைத்ததோ!
அவனுக்கு பிடித்த உணவுகளாய்
அன்புடன் உபசரித்து,
ஒவ்வொரு உணவுக்கு பின்னும்
வெள்ளித் தட்டில் வைத்து
கொடுத்தார்கள் பணமாக.

மகிழ்வுடன் பெற்றுக் கொண்டாலும்
காரணம் கேட்க வெட்கப்பட்டு,
மூன்றாம் நாள் விருந்து முடித்து
தயங்கித் தயங்கி அந்த புது மாப்பிள்ளை
கேட்டேவிட்டான் உறவுக்காரச் சிறுவனிடம்-
"எதற்கு தம்பி சாப்பாடும் போட்டு
சாப்பிட வேளாவேளைக்கு
பணமும் கொடுக்கிறீர்கள்?"

தெளிவாய் சிறுவன் சொன்ன பதில்-
"அப்படித்தானே மாமா
அக்காவைக் கட்டிக்கிட்டீங்க!"

நெல்லையப்பன் கவிதைகள்-64: "பூக்களின் பாடம்"

செடியிலிருந்து பிரித்த பின்னும்
மாலையாக தொடுத்த பின்னும்
மரணத்திற்கு வெகு அருகிலும்
மலர்ந்து பூ சிரிக்கும் சிரிப்பில்
பாடம் இருக்கு மனித குலத்திற்கு.

காற்றுப்போல கனமற்று இருப்பதில்
விசயமுண்டு குறித்துக்கொள்ள;
உருவு கண்டு எள்ளாமை எனபது,
செம்பருத்தி படித்த பாடம்-
மல்லிகை மலர்களிடமிருந்து;

இறுமாந்திருந்த
வண்ண மிகு மலர்கள்
இரவினில் கற்ற பாடம் -
"வண்ணத்தை விட
வாசனை சிறந்தது"

கதம்ப மாலையிடம்
உதிரிப்பூக்கள்,
கற்றுக்கொண்ட புதிய பாடம்-
ஒன்று சேர்ந்தால் மதிப்புயரும்;

வண்ணமும் வாசமும்
தந்த தலைக் கனத்தைத்
தட்டி வைக்க,
பாதியில் வந்ததுதானோ
ரோஜாவில் முள்.

உள்ளே இருக்கும் மது
வண்டுகளுக்கு மட்டும்தானென
புரிந்து கொண்டுள்ளதால்
தள்ளாடுவதில்லை மலர்கள்.

தண்ணீரிலேயே இருந்தாலும்
தலையை மட்டும்
தண்ணீருக்கு வெளியே வைத்திருக்க
அறிந்து வைத்திருக்கின்றன
அல்லியும் தாமரையும்.

கண்களையும் காதுகளையும்
விரியத் திறந்து வைத்தால்,
பார்க்கும் ஒவ்வொன்றிலிருந்தும்
பாடம் படிக்கலாம் என்பது
பூக்கள் புகட்டும் புதிய பாடம்.

9 மார்., 2009

நலக்குறிப்புகள்-37: "குழந்தைகளுக்கு ஏற்படும் சளித் தொந்தரவு"

கற்பூரவல்லியின் இலையை நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து சொட்டு விட்டு, அதனுடன் சிறிது தேன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் சளி நீங்கிவிடும். நுரையீரல் சுத்தமாகிவிடும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்றி: ந.ஜீவா & தினமணி கதிர், பிப்ரவரி 22, 2009 ("வீட்டுக்குள்ளே இருக்கும் மூலிகைகள்" என்ற கட்டுரையிலிருந்து)



கடிதம்-15: "வரலாற்றில் லாலு"

இரயில்வே அமைச்சர் லாலுவின் இடைக்கால பட்ஜெட் செய்தி கண்டேன். உலகம் போற்றும் அளவுக்கு இரயில்வேயை நவீனப்படுத்தி, மக்களுக்குச் சிரமமின்றி பயணக் கட்டணங்களைச் சீர்படுத்தி, இந்திய வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். திரும்பவும் அதே பொறுப்பில் இருந்து நாட்டுக்குச் சேவை செய்ய வளைகுடாவாழ் இந்தியர்கள் சார்பாக வாழ்த்துகிறேன். - முகவை எம்.ஜபருல்லா, சவூதி அரேபியா.
- தினமணி, மதுரை, மார்ச் 3, 2009 (அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியிலிருந்து)
நன்றி: திரு எம்.ஜபருல்லா & தினமணி.

நெல்லையப்பன் கவிதைகள்-63: "சதைச் சந்தை"

இரவிலும் நடக்கும் பங்குச் சந்தை,
இடைத்தரகர்களுக்கு இன்பச் சந்தை
"வாங்குபவனும் விற்பவளும்"
நட்டப்படும் ஒரே வியாபாரம்.

முழுவதும் காட்டினாலும்
முகம் காட்ட முடியாத இடம்
கரைவேட்டிகள் பல கசங்கிய இடம்
காக்கிச் ச்ட்டைகளுக்கோ இலவசம்

அனுபவம் விலை போகாத சந்தை
உணர்வேயில்லாமல் பெண்களும்
அறிவே இல்லாமல் ஆண்களும்
சதைகளால் சந்திக்கும் சங்கடம்

உடலை வளர்க்க
உடலையே விற்பவர் உறைவிடம்
ஒரு பசி தீர
வேறு பசி தீர்ப்பவர் பலிபீடம்

தினம் கைநனைக்க
கண் நனைப்போர் வசிப்பிடம்
விழுந்தால் எழ முடியா வழுக்குப்பாறை
தானாக விழுபவரைவிட
தள்ளி விடப்பட்டோர் தவிப்பிடம்

பெண்களை
சந்தைக்கு கொண்டு வந்த
ஆண்களை
என்ன செய்யலாம்?

அவர்கள்
ஆண்கள் என்பதற்கான
அடையாளத்தையே
அறுத்துவிடலாமா?

6 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-62: "விழியிழந்தோர்"

முக்கண்ணன்
இவர்கள் மீது
நெற்றிக்கண்
ஏன் திறந்தான்?
காக்கும் இமையே
கண் திருடலாமா?

பண்ணிரு விழிகளிலே
பரிவோடு ஒரு விழியால்
பார்த்திடவே வேலவனும்
ஏன் மறந்திட்டான்?

கண்ணாத்தாள்
ஏன் கைவிட்டாள்?
மீன் கண்ணாள்
ஏன் மறந்திட்டாள்?

ஆயிரம்
கண்ணுடையாள்
அலட்சியமாய்
விட்டதென்னே?

விரல்களை
விழிகளாக்கி
காதுகளால்
கற்கும் இவர்கள்
மூன்று கால்களால்
நடந்தாலும்
சொந்தக்காலில்
நிற்ப்பவர்கள்.

இருட்டு ஒரு
பொருட்டில்லை
இறைவன் மீதும்
வெறுப்பில்லை

எண்ணும் எழுத்தும்
கண் எனத் தெளிந்ததால்
கல்வி எனும் வெளிச்சம்
கைகொடுக்கும் இறுதிவரை.

வெறும் ஆறு புள்ளிகளால்
எதனையும் படிக்கலாம்
கெல்லரும்,பிரைலரும்
வெற்றி பெற வில்லையா?

அன்பின் மிகுதியினால்
வீட்டினுள் சிறை வைத்து
எதிர் காலத்தை
இருட்டாக்காமல்

பர்வையற்ற சிறார்களை
சிறப்புப் பள்ளியில் சேர்த்து
கல்விக்கண் கொடுப்போம்
கண்மணிகள் வாழட்டும்!

5 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-61: "பேன்"

பேன்

தலை நகர் வாசம்
தலைவியருடன் சகவாசம்

மேட்டுக்குடி பிறப்பு
எனவேதான் வசிப்பதில்லை
தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பாம்
மீசையிலும், புருவத்திலும்

தலைநகர்தான் என்றாலும்
வாசம் புரிவதில்லை
வழுக்கைத் தலையில்

இது கடிக்கும், இரத்தம் குடிக்கும்,
சீப்பின் பற்களுக்கு டிமிக்கி கொடுக்கும்,

சிறைபிடிக்க
பேன் சீப்பு என்னும்
ஸ்பெஷல் சீப்பு வேண்டும்.

சிகைக்காய் இவருக்கு பகைக்காய்
இவருக்கு பிடிக்காத பூ ஷாம்பூ!

சில சமயம்
வேலைக்காரியின் தலையிலிருந்து
வீட்டுக்காரியின் தலைக்கு வந்து
கனவன்மார்களைக் காட்டிக் கொடுக்கும்

மனிதர்களே!
ஈரைப் பேனாக்கி
பேனைப் பெருமாளாக்கும்
வித்தை தெரிந்தோரே!
அழுக்கைச் சேர விடவேண்டாம்
தலையிலும் மனத்திலும்

பலவுண்டு
நாம் பேண வேண்டியவை
பேன் வேண்டாமே
!

4 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-60: "திருநங்கை(அரவாணி)"

உடல் ஒன்றாய்
மனம் வேறாய்
பிழையாய் இயற்கை
எழுதிய கவிதை;
உண்மையில்,
உயிருள்ள கவிதை;

இந்தக் கவிதையால்
இன்னொரு கவிதையை
எழுத முடியாது-
அப்பாவாக முடியாது;
அம்மாவாக முடியாது;
ஆனால் நல்ல மனிதராய்
வாழ முடியும்;

திரிசங்கு நரகத்தில்
உழலும் இவர்கள்,
கேலிப் பொருளல்ல
போகப் பொருளல்ல;
சமமாய் நடத்தினால்
சாதிக்க வல்லவர்கள்;

பிச்சைக்கும்,
பலான தொழிலுக்கும்,
ஒதுக்கி வைத்து,
பரம்பரை இல்லாதவர்களை,
குற்றப் பரம்பரையாக்காமல்,
மனிதராய் வாழ விடுவோம்!

நம்மைப் போலவே
பசிக்கிறது;
நல்ல கவிதையை
ரசிக்கிறார்கள்;
வாய் விட்டு சிரிக்கவும்,
கண் கலங்கி நிற்கவும்,
சினந்து சிவக்கவும்,
இவர்களாலும் முடிகிறது;

அர்த்த நாரீஸ்வரர்கள்
எதிர்பார்ப்பது
இரக்கத்தை அல்ல-
அங்கீகாரத்தை மட்டுமே;

இட ஒதுக்கீடு வேண்டாமாம்;
ஒதுக்கி ஓரம் கட்டாமல்,
இதயத்தில் நிரந்தர
இடந்தர வேண்டுமாம்.

பெற்றோர்கள் கூட
கைவிட்ட இவர்களை,
நண்பர்கள் பட்டியலில்
நாம் சேர்த்துக் கொண்டு,
மன உளைச்சல் அகல
மருந்தாய் இருப்போம்;

சந்தோசத்தில் பெரியது,
மற்றவர்களை
சந்தோஷப் படுத்துவது தானே!

இன்றைய சிந்தனைக்கு-41:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் - திருவள்ளுவர்.

நலக்குறிப்புகள்-36: "பிணி அணுகா விதி"

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவரான தேரையர் 'பிணி அணுகா விதி' என்று வழிமுறைகளைப் பாடல்களாக எழுதியுள்ளார்.

"நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்டால் தம் பேருரைக்கில் போமே பிணி" என்பது அவ்விதிகளில் ஒன்று. நீரைக் காய்ச்சிக் குடிக்கவேண்டும். தயிரை உண்ணாமல் நீர்மோர் போல் அருந்துங்கள். உருக்கிய நெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் நோயே வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

தினமணி 'கொண்டாட்டம்' இணைப்பில் சாருகேசி எழுதிய 'பிணி அணுகா விதி தெரியுமா?" என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

நன்றி: திரு சாருகேசி & தினமணி.

இன்று ஒரு தகவல்-21: "மின் செலவை குறைக்க சி.ஃப்.எல். பல்புகள்"

மின்சார சிக்கனத்திற்காக மத்திய அரசு 'பசாத் லாம்ப் யோஜனா' என்ற புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. ரூபாய் எண்பது மதிப்புள்ள சி.ஃப்.எல்.பல்புகள் (Compact Fluorescent Bulbs) அரசு மானியத்தொகையால் பதினைந்து ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் தற்போது விசாகப்பட்டினத்திலும், ஹரியானாவிலும் செயல்படுத்தப்படுகிறது. அதிக வெளிச்சம் குறைந்த செலவில் பெறலாம். தற்போது செலவாகும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே செலவாகும். இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார சிக்கனம் மட்டுமல்லாது, கரியமில வாயு போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுவதும் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.
ஆதாரம்: தினகரன், நாளிதழ், மதுரைப் பதிப்பு, பிப்ரவரி 26, 2009.
நன்றி: தினகரன்.

கடிதம்-14: "தீர்ப்பு கேலிக்கூத்து"

முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமிற்கு, அளவிற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. 1997-ல் தொடுக்கப்பட்ட வழக்கு, பதினோரு ஆண்டுகள் நடைபெற்றபின், தீர்ப்பு கூறப்பட்டு, வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின்படி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை தரப்பட்டு, அப்பீல் செய்ய இரண்டு மாதம் தவணை தந்து, அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அளித்த தீர்ப்பு குறித்து உடனே மேல்முறையீடு செய்ய, நீதிமன்றமே தவணை தந்ததால், தீர்ப்பில் குறை உள்ளது என்று தானே அர்த்தம்; இப்படிப்பட்ட தீர்ப்பை தருவதற்கு பதினோரு ஆண்டுகள் தேவையா?

இந்த தீர்ப்பின் மூலம் ஒரு நிமிடம் கூட சிறை வாயிலைத் தொடவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டதே. ஏற்கனவே பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன; மேல்முறையீடு மூலம் இன்னும் இருபது ஆண்டுகள் ஓட்டிவிடலாம்.

சுக்ராமிற்கு எண்பத்திரண்டு வயது. அப்பீல் முடிந்து தீர்ப்பு வரும்போது, எப்படியும் நூற்றிரெண்டு வயதாகிவிடும். அதன் பின்னர் அவருக்கு தண்டனை தந்து, அவர் சிறையில் இருந்து.... நினைக்கவே கேலிக்கூத்தாக உள்ளது.

இப்படிப்பட்ட உளுத்துப்போன சட்டங்களை வைத்துக்கொண்டு, உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்று, நம்மை நாமே பீற்றிக்கொள்வது, நூறு சதவிகித பைத்தியக்காரத்தனம். - ஏ.மலரவன், சென்னை, "இது உங்கள் இடம்", தினமலர், மதுரை.
நன்றி: திரு ஏ.மலரவன் & தினமலர்.

நெல்லையப்பனின் புத்தகச் சிந்தனைகள்-1:

அச்சேறும் ஒவ்வொரு புத்தகத்தின் பிரதியிலும்
அதனைப் படிக்கப் போகிறவரின் அல்லது
போகிறவர்களின் பெயர் கண்ணுக்கு தெரியாத
மையினால் எழுதப்பட்டு விடுகிறது. வெகு சில
நேரங்களில் மட்டுமே அந்தந்த புத்தகங்கள்
உரியவரிடம் நேரடியாக சென்றடைகிறது.

பெரும்பாலான புத்தகங்கள் உரியவரால்
படிக்கப்பட நீண்ட கால தவமும், பயணமும்
மேற்கொள்கின்றன.

பழைய புத்தகக் கடையில் என் வயதுள்ள
பல புத்தகங்களை நான் வாங்கியிருக்கிறேன்.
அதுபோல கோட்டையூர் நூலகத்தில் பல
புத்தகங்கள் எனக்காக இருபது ஆண்டுகள்
காத்திருந்திருக்கின்றன. ஒட்டிக்கொண்டிருந்த
பக்கங்களை பிரித்தபோது அதை நான்
அறிந்துகொண்டேன்.

வெளியூர் சென்ற இடங்களில் பழைய
புத்தக கடைகளில் 5 ரூபா வித்தியாசத்தில்
பேரம் படியாததால் கோபப்பட்டு வாங்காது
விட்ட புத்தகங்கள் எத்தனையோ! அப்படி
வாங்காது விட்ட புத்தகங்களுக்காக வருந்தியது
எத்தனையோ!

நான் தொலைத்த பல புத்தகங்களை
நண்பர்கள் வீட்டில் கண்டுபிடித்திருக்கிறேன்.
ஒரு திடீர் ஞானோதயத்தில் என் அலமாரியில்
அடுக்கி வைத்திருந்த மற்றவர்களின் புத்தகங்களை
அவர்களை தேடிப் பிடித்து...


தொடரும் ...

நெல்லையப்பன் கவிதைகள்-59: "கேள்வி முயல்"

கேள்விகள் எப்போதும்
எளிதானவை
பதில் சொல்ல வேண்டியவர்
நாம் இல்லைஎன்றால்.

கேள்விகள் சுமைகள்-
சுமக்க வேண்டும்
சுமைதாங்கி பதில்கள்
கிடைக்கும் வரை.

கேள்விகளால் தான்
சாத்தியமானது,
மனித இனத்தின்
இன்றைய உயரம்!

ஒரு கேள்விக்கு
பல விடைகளும்,
விடையே இல்லா
பல கேள்விகளும்
புதியனவல்லவே !

சில கேள்விகள்
முகத்தில் அறையும்;
சில முகத்தை மலர்த்தும்;
வேறு சிலவோ,
முகத்திரை கிழிக்கும்.

முகம் சுளிக்க
புருவம் உயர்த்த
கேள்விகள் உண்டு!

கேட்கக்கூடாத
கேள்விகளும் உண்டு;
சில கேள்விகளுக்கோ
அவசியமில்லை பதில்!

ஏன், எதற்கு என்று
கேட்ட சாக்ரடீசும்
பெயக்கண்டும்
நன்சுண்டமைந்தான்!

சில கேள்விக்கு
நல்ல பதில்
எதிர்க்கேள்விகளே!

அம்மாவின் கைப்பிடித்து
உடன்வரும் குழந்தை போல,
ஒருசில கேள்விகள்
துணைக் கேள்விகளை
உடன் அழைத்துவரும்

கேட்டவரால்
சில கேள்விகளும்
கேட்கப்பட்டவரால்
சில கேள்விகளும்
வரலாறு ஆனதுண்டு!

சில கேள்விகளை
கேட்காமல் விட்டதால்
பலருக்கும்
குளிர் விட்டுப்போச்சு!

"எடுக்கவோ, கோர்க்கவோ?"
"சுட்டபழம் வேண்டுமா?'
"நீயுமா புரூட்டஸ்?"
யட்சன் கேள்விகள் ,
தருமி கேள்விகள்,
"5 மனைவி -ஒரு
கணவன் கேள்விகள்" * என
புகழ் பெற்ற கேள்விகள்
அவரவர்க்கு வேறுபடும்!

அனைவருக்கும் பொதுவாய்
சிறந்த ஒரு கேள்வி -
"நான் யார்?"

---------
* 5w,1h (ஏன், என்ன, எங்கே, யார்,எப்பொழுது & எப்படி)

2 மார்., 2009

பார்த்தது-3: "காரைக்குடி புத்தகத் திருவிழா 2009"

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஒன்பது நாளாக நடைபெற்ற ஏழாவது மாநில அளவிலான காரைக்குடி புத்தகத் திருவிழா நேற்றோடு நிறைவு பெற்றது.

காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி பற்றிக் கனவு கண்டு, மிகுந்த சிரமங்களுக்கிடையில் செயல்படுத்தி , முதல் நான்கு புத்தகத் திருவிழாக்களின் பொறுப்பாளனாக செயல்படும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், புத்தகத் திருவிழா தொடர்ந்து விடாமல் நடைபெறுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பல இடையூறுகள் காரணமாக போகமுடியாமல், இறுதி நாளான நேற்று இரவுதான் திருவிழாவிற்குச் செல்ல முடிந்தது.

அரங்கினுள் நுழையும்போது, வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் அழகிய, அற்புத நந்தவனத்திற்குள் நுழையும் உணர்வே ஏற்பட்டது. வண்ணமலர்களை ஈக்கள் மொய்ப்பதுபோல் மக்கள் பேராவலுடன் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வதைக் கண்டு உவகை அடைந்தேன். பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கிறபோது வாசித்தல் என்பது ஒரு கரை காணமுடியாத கடல், வாழ்நாள் முழுவதும் வாசித்தாலும் நாம் வாசித்தது கைம்மண் அளவே என்ற பணிவும் பிறந்தது.

நல்ல நூல்களை மேலும் மேலும் படித்து, இன்புற்று, அவற்றில் கூறப்பட்டுள்ள மேன்மையான கருத்துக்களை உள்வாங்கி, மனதில் மேன்மையான, உன்னதமான சிந்தனைகளை வளர்த்து, வாழ்க்கையில் மகத்தான சாதனைகள் படைக்கவேண்டும் என்ற வேட்கையை இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. இத்தகைய தலை சிறந்த தொண்டினைச் செய்துவரும் இப்புத்தகத் திருவிழா அமைப்பாளர்களையும், இது சிறப்பாக நடைபெற பல வகைகளிலும் உதவி புரிந்துள்ள அன்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது போன்ற நல்ல வாய்ப்புக்களை பயன்படுத்தி அனைவரும் மேன்மையுற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நிறைவாக ஒன்று. "படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது; சிந்திக்காமல் படிப்பது பயனற்றது". ஆவலுடன் புத்தகங்களை வாங்கிச் செல்லும் அனைவரும் இக்கருத்தினை மனதில் நிறுத்தி பயனடைய வேண்டுகிறேன்.

கடிதம்-13: "மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்"

ஐகோர்ட் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்பவர்கள், நீதிமன்றத்தை அவமதிப்பவர்கள் தானே? முன்பெல்லாம் குறுக்கே, நெடுக்கே நடந்தாலோ, வெளி வரண்டாவில் சத்தம் செய்தாலோ, 'நீதிமன்றத்தின் மாண்புக்கு இடையூறு நேர்ந்துவிட்டது' என்று உடனுக்குடன் தண்டனை வழங்கும் நீதியின் மாண்பு, இப்படி மலினப்பட்டு விட்டதே! சாதாரண பொதுமக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், 'விடிவெள்ளி' நீதித்துறைதான். அதன் மாட்சியும், எல்லையற்ற அதிகாரமும் கொச்சைப்படுத்தப் பட்டு விட்டதே! இங்கே அடி வாங்கியது சுப்ரமணிசாமியா, காவல்துறை உயரதிகாரியா என்பது முக்கியமல்ல! நீதிமன்றத்தின் மாண்பை நம்பித்தானே, இஜட் பிளஸ் பாதுகாப்பை வெளியே நிறுத்திவிட்டு நுழைந்திருக்கிறார்? காவல்துறை உயர் அதிகாரி உடுப்பு, ரேங்க், அடையாளச்சின்னங்களுடன் பணிந்து நின்றது, கோர்ட்டின் மாண்பை நம்பித்தானே? கருப்பு அங்கி உடையினுள் புகுந்துகொண்டு, இரு நீதிபதிகளின் கண் முன்னேயே அராஜகம் செய்ததும், கோர்ட் அவமதிப்புத்தானா என்று விசாரித்துத்தான் நடவடிக்கை தொடர வேண்டுமா? - ச.ராசன், திருச்சி.
- 'இது உங்கள் இடம்', தினமலர், மதுரை, 26.2.2009.
நன்றி: திரு ச.ராசன் & தினமலர்.

இன்று ஒரு தகவல்-20: "கையகலக் கருவியில் பத்தாயிரம் புத்தகங்கள்!"

'கிண்டில்' (Kindle) போன்ற கையகல 'எலெக்ட்ரானிக் ரீடர்' (Electronic Reader) தமிழ்நாட்டிற்கு இன்னும் மூன்று மாதத்தில் வரப்போகிறது. தமிழ் பதிப்பு நிறுவனமான 'கிழக்கு பதிப்பகம்' இந்த சாதனையை நிகழ்த்த இருக்கிறது. எட்டுக்கு ஆறு அளவில் உள்ள திரையில் அச்சுப்புத்தகத்தை படிக்கும் உணர்வோடு, விழிகள் சோர்வுறாமல் படிக்கலாம். சுமார் பத்தாயிரம் புத்தகங்கள் வரை நினைவில் கொள்ளமுடியும் இக்கருவியால். மேலும் குறிப்பெடுக்க, 'அசைன்மென்ட்' எழுத என்று பல வசதிகளைக் கொண்டிருக்கும் இக்கருவி. ஒரு தடை 'சார்ஜ்' செய்தால் ஆறு மணி நேரம் இக்கருவி இயங்கும். ஆன்லைன் விற்பனை நிலையமான 'அமேஜான் டாட் காமுடன்' (Amazon.com) இணைந்து கிழக்கு பதிப்பகம் இதை நடைமுறைப்படுத்த இருக்கின்றது. எழுத்துக்களை பெரிதாக்கிப் படிக்க, வேண்டும் பக்கத்தை மட்டும் படிக்க, மின்காந்த பேனா மூலம் குறிப்புகளை எழுதிக்கொள்ள - இப்படிப் பல வசதிகளைக் கொண்டிருக்கும் இக்கருவி. இதன் வழியாக புத்தகங்களை வாங்கும் பொது முப்பது சதவிகிதம் விலை குறைவாகக் கிடைக்கும். இப்படிப் பல அறிய வசதிகளைக்கொண்ட இக்கருவியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மக்களின் தேவை உணர்ந்து இக்கருவியைத் தமிழகத்திற்கு கொண்டுவரவிருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.
ஆதாரம்: தினகரன் வசந்தம், மார்ச் 1, 2009.
நன்றி: தினகரன் தமிழ் நாளிதழ்.

தேவாரம்-5:

நீருளான் தீ உளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமாஎத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றை வெள்ளேருகந் தேறியஒருவன்
பாருளார் பாடலோ டாடலறாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்

இருக்கையாப் பேணிஎன் எழில்கொல்வதியல்பே.

யாருள் பிரபஞ்சம் தொகுத்தும், வகுத்தும் ஒன்றித்திருக்கிறதோ, அவர் உயிர்களுக்கு இறைவன். குறுக்கும் நெடுக்குமாக அவர் வியாபித்திருக்கிறார். அவர் அழிவற்றவர். எல்லார் உள்ளத்திலும் அவர் வீற்றிருக்கிறார்.
- சம்பந்தர் தேவாரம்.
நன்றி: தர்ம சக்கரம், ஆனி மாத இதழ், சர்வஜித் வருடம், சக்கரம் 56, ஆறாம் 6.
(திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன வெளியீடு)

நலக்குறிப்புகள்-35: "இஞ்சி, பூண்டு, வெங்காயம்"

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அதிக அளவு உணவில் பயன்படுத்தினால் உடலில் நஞ்சு படியாது, கொழுப்பு சேராது.
தகவல்: "வீட்டுக்குள்ளே இருக்கும் மூலிகைகள்", ந.ஜீவா, தினமணி கதிர், 22.2.2009.
நன்றி: திரு ந.ஜீவா & தினமணி கதிர்.

நெல்லையப்பன் கவிதைகள்-58: "தொப்புள்கொடி உறவு "

நாற்பதாண்டு கால
பகுத்தறிவுப் பாரம்பரியத்தில்
ஒன்று கொளுத்துகிறார்கள்
அல்லது கொளுத்திக் கொள்கிறார்கள்.

சட்டக் கல்லூரியே ஆனாலும்
சாதிக் கட்டையால்
அடித்துக் கொள்கிறார்கள்
நீதி மன்றமே ஆனாலும்
காக்கி சட்டையும் கறுப்புச் சட்டையும்
அடித்துக்கொண்டு அநீதி காக்கிறார்கள்.

மொழியை வாயில் குதப்பி மென்று

புளிச்சென்று அடுத்தவன்மேல்
துப்பித் தொலைக்கிறார்கள்
வன்முறைக்கு தினமும்
வந்தனம் செய்கிறார்கள்.

அகதியாக வந்தவர்களை

வசதியற்ற முகாம்களில் தவிக்கவிட்டு
அயல்நாட்டில் அவர்களுக்கு
தனிநாடு கேட்கிறார்கள்.

தனிமனித கோபதாபங்களுக்காக

ஒரு இனத்தையே காவு கொடுக்கிறார்கள்
கடலளவு மாற்றம் வேண்டும்
வன்முறையைக் கைவிட வேண்டும்
"தலை"யைக் கொடுத்தாவது
மிஞ்சிய மக்களை காக்க வேண்டும்.