என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
30 டிச., 2008
இன்றைய சிந்தனைக்கு-36:
வாழ்வில் ஒரு துறையில் தவறான முறையில் நடந்துகொள்ளும் ஒருவன், இன்னொரு துறையில் சரியானமுறையில் செயல்பட முடியாது. வாழ்க்கை என்பது பிரிக்க முடியாத ஒரு முழுப்பொருள். - மஹாத்மா காந்தி
இன்று ஒரு தகவல்-17:
அரசியல்வாதிகளின் பாதுகாப்புப் படைகளுக்காக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய்க்குமேல் செலவிடப்படுகிறது.
"தமிழ் ஓசை" நாளிதழில் 'சதுரன்' கட்டுரையிலிருந்து.
நன்றி: தமிழ் ஓசை.
"தமிழ் ஓசை" நாளிதழில் 'சதுரன்' கட்டுரையிலிருந்து.
நன்றி: தமிழ் ஓசை.
என்ன நடக்கிறது?-8: "பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை!"
நாடு முழுவதும் பள்ளிகள் செயல்பாடு குறித்த ஆய்வு சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆரம்பப் பள்ளிகளில் மூன்றில் இரண்டு பங்கு தலைமை ஆசிரியர் இல்லாமலேயே செயல்படுகின்றன. மகராஷ்ட்ரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 65% பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. ஏழு மாநிலங்களில் 70% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை. பத்து மாநிலங்களில் 20% ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் வசதி இல்லாது அவதிப்படுகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 90% அதிகமான ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. 78% பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லை.
தினகரன் (மதுரைப் பதிப்பு), டிசம்பர் 27, 2008 இதழில் வெளியான செய்தியில் ஒரு பகுதி.
நன்றி: தினகரன்.
தினகரன் (மதுரைப் பதிப்பு), டிசம்பர் 27, 2008 இதழில் வெளியான செய்தியில் ஒரு பகுதி.
நன்றி: தினகரன்.
சாதனை-5: "மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகதமி விருது!"
பிரபல சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்படவிருக்கிறது. இலக்கிய படைப்புகளுக்கான மிக உயர்ந்த இந்த விருது, அவருடைய "மின்சாரப்பூ" என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.
பத்து வயதில் தந்தையை இழந்து, குடும்பப் பொறுப்பை ஏற்கவேண்டியதாலும், வறுமையினாலும் ஐந்தாம் வகுப்பிற்குமேல் படிக்க முடியாமல் போனது. ஆனாலும் தன்முயற்சியால் படிப்பதை நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களைத் தேடிப்படித்தார். கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக்கடை நடத்திவரும் இவர், இதுவரை முப்பத்தாறு நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் இருபத்திஇரண்டு சிறுகதைத் தொகுப்புகள்.
காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு எமது அழைப்பை ஏற்று வந்து வாசகர்களுடன் உரையாடி, சிறப்புரையாற்றி அவரது எளிமையாலும், தெளிவான சிந்தனையாலும் அனைவரையும் கவர்ந்தார் என்பதை நினைக்கையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தன்னம்பிக்கையாலும், தளராத ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றிகண்ட இச்சாதனையாளருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நலக்குறிப்புகள்-27: "சாளவாய்"
உறங்கும்போது சாளவாய் நீர் வடிவதற்குக் காரணம் உண்ட உணவு சரியாக ஜீரணமாகாததுதான். இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவை உண்ண வேண்டும். அடுத்து சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. உண்டபின் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது. குறைந்த பட்சம் ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்கவேண்டும்.
பாரதி கவிதைகள்-12:
மேன்மைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை;
யான் முன் உரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.
விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை;
யான் முன் உரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.
27 டிச., 2008
கேள்வியும் பதிலும்-26: "கவிஞன் யார்?" "எது கவிதை?"
கேட்டேன் என்பவன் சமூக மருத்துவன். பலநேரங்களில் யதார்த்தம் முன் கற்பனை உலகிலேயே வாழும் கோமாளியாகவும் வாழ்ந்து மறைந்து போகிறான். பார்த்ததைப் புதிதாய்ப் பார்ப்பவன் பாவலன். பார்த்ததை மீண்டும் பார்ப்பவன் பாமரன். கவிஞன் என்பவன் தலைசிறந்த ரசிகனாகவும் இருக்கிறான். அதேபோல் கவிதையில் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்ற பேதமில்லை. கவிதைகளுக்கு வார்த்தைகளே தேவையில்லை. வாசிக்கும் முன்பே புரிந்துவிடக்கூடியதுதான் கவிதை. எளிமைதான் அதன் ஆகச் சிறந்த இயல்பு. இந்த இடத்தில் எனது கவிதை ஒன்றினைப் பகிர ஆசைப்படுகிறேன்:
மொழியின்முன் மண்டியிட்டு
வார்த்தை வரம் கேட்டேன்.
அரசியல்வாதிகள் வந்து
அள்ளிக்கொண்டு
போய்விட்டார்கள்.
கட்டுரையாளர்கள் சிலர்
கேட்டு வாங்கிப்போனார்கள்.
மீதமிருந்ததை பேசவும் ஏசவும்
மனைவியர் வாங்கிப்
போனார்கள்.
தாமதமாக வந்து நிற்கிறாயே,
தமிழ்க் கவிஞனே என்று
மொழி மிகவும் வருந்தியது.
வேறு வழியின்றி வெற்றுக்
காகிதத்தை மடித்து
வழியில் என் காதலியிடம் தந்தேன்.
வாங்க மறுத்த அவள்,
நீ என்ன எழுதியிருப்பாயென
எனக்குத் தெரியுமென்றாள்.
வார்த்தைகளே இல்லாத
கவிதையை
வாசிக்காமலேயே அவள்
புரிந்துகொண்ட பிறகுதான் தெரிந்தது,
கவிதைக்கு வார்த்தைகள்
அவசியமில்லையென்று.
- "ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் நேர்காணலிலிருந்து ஒரு பகுதி"
"இனிய உதயம்", மாத இதழ், நக்கீரன் வெளியீடு, டிசம்பர் 2008.
நன்றி: திரு எஸ்.இராதாகிருஷ்ணன் & "இனிய உதயம்"
22 டிச., 2008
என்ன நடக்கிறது?-7: "அரிசி ஒரு ரூபாய், சிறுநீர் கழிக்க இரண்டு ரூபாய்!"
தினமலர் வார இதழில் ஒரு வாசகர் தமது உள்ளக்குமுறலை ஒரு கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் நாட்டில் பல பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு ரூபாய். ஆனால் அந்த கழிப்பிடங்களுக்குள் நுழைந்து, புதிதாக ஏதாவது நோய் கொள்முதல் செய்யாமல் வருபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வெளிச்சம் கிடையாது, பராமரிப்பு கிடையாது, சமயத்தில் தண்ணீரும் இருக்காது. மூக்கைக் கையில் பிடித்தபடியேதான் உள்ளே செல்லவேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இரண்டு ரூபாயா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அரசியல்வாதிகள் பினாமிகள் மூலமாக ஒப்பந்தம் பெற்று, பணம் குவிப்பதிலேயே குறியாக இருப்பதால் பராமரிப்புச் செலவு செய்யப்படுவதில்லை. யாராவது ஏதாவது கேட்டால் அடி, உதைதான். முதலில் கழிப்பிடங்கள் பணம் சம்பாதிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ளனவா அல்லது மக்களின் ஆரோக்கியத்திற்காக சேவை நோக்கில் கட்டப்பட்டிருக்கின்றனவா என்பது தெளிவாக வேண்டும். சேவை நோக்கம் என்பது உண்மையானால் கழிப்பிடங்களை தொண்டு நிறுவனங்களோ அல்லது பராமரிப்புச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பெரிய தொழில் நிறுவனங்களோ நிர்வகிக்க வேண்டும். நடக்குமா?
கடிதம்-7: "குற்றப் பின்னணி"
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விபரங்களை தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆராய்ந்துள்ளது. அதன்படி குற்றப் பின்னணி கொண்டவர்களில் 125 பேர்கள் வெற்றிபெற்றுள்ள சேதி மிகுந்த கவலை தருகிறது. இவர்களுக்கு இனி எம்.எல்.ஏ. என்ற அதிகாரமும் கிடைக்கும்போது, நிலை என்னவாகும் என சொல்லவே தேவையில்லை. குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் தீவிர கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். - வி.எஸ்.கிருபானந்தம், கும்பகோணம்.
தகவல்: தினகரன், மதுரை, டிசம்பர் 19, 2008. ("கடிதங்கள்").
தகவல்: தினகரன், மதுரை, டிசம்பர் 19, 2008. ("கடிதங்கள்").
இன்றைய சிந்தனைக்கு-35: "கடன் அட்டைகள், ஒரு எச்சரிக்கை!"
அமெரிக்காவின் மக்கள் தொகை முப்பது கோடி. அங்கு புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டைகளின் எண்ணிக்கையோ நூற்றுஇருபது கோடி! அதாவது, சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும் நான்கு கடன் அட்டைகள் வைத்துள்ளனர். அமெரிக்கக் குடும்பங்களின் சேமிப்பு 1980-களில் எண்பது சதவிகிதமாகவும், 1990-களில் எழுபத்துஒன்று சதவிகிதமாகவும், 2000-ல் நாற்பத்துஒன்பது சதவிகிதமாகவும், 2005-ல் சேமிப்பிற்குப் பதிலாக கடன் சுமையும் ஆக மாறிவிட்டது. 2006-ல் சேமிப்பு மைனஸ் இருபத்தி இரண்டு சதவிகிதமாக மாறிவிட்டது. இந்தியர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடம். இப்போதே நாம் விழித்துக் கொள்ளாவிடில், நமக்கும் இதே நிலைமைதான்.
ஆதாரம்: தினமலர், மதுரை, டிசம்பர் 19, 2008. ("தகவல் சுரங்கம்").
நன்றி: தினமலர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)