31 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-140:

படித்தல்  என்பதே  ஆசிரியரும்  மாணவரும்  ஒரு சேர  கற்றுக்கொள்வதுதான். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-45:

எத்தனைதான்  சன்மம்  எடுத்தெத்தனை  நான்பட்ட  துயர்
அத்தனையும்  நீ  அறிந்ததன்றோ  பராபரமே  

யோக சித்தி-59: அறநெறி-5

மூவழுக்கு  நீங்குகவே,  முத்தூய்மை  ஓங்கிநர
தேவர்களும்  வாழ்க  செழித்து.

மனிதனை இன்பநிலை  சேராது  தடுப்பான  பழமையான  மூன்று  அழுக்குகள்:-  மோகவெறி,  மாயாபாசம், தன்னல  அகந்தை.  இவை  நீங்குக.  எப்படி  இவற்றை  நீக்குவது?  முத்தூய்மை,  அதாவது  மன, மொழி,  மெய்த் தூய்மை  ஓங்கவேண்டும்.   இவ்வாறு  மலமொழிந்து  அமலமானோர்  தேவராவார்.  அத்தகைய  சுத்த  தேவர்  குலம்  உலகிற்  செழித்தோங்குக! 

30 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-139:

வறுமை  குற்றங்களுக்குத்  தாயெனில்,  புத்தியின்மை  அவற்றுக்குத்  தந்தை.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-44:

இன்று  புதிதன்றே  எளியேன்  படுந்துயரம்
ஒன்றும்  அறியாயோ  உரையாய்  பராபரமே 

யோக சித்தி-58: அறநெறி-4

வசை  சினவஞ்ச  வழக்கற்றுத்  தீய
நசையற்று  நானுற்று  வாழ்.

மனத்தைக்  கெடுக்கும்  தீமைகளைக்  காண்மின்:-

1 .  வசை:  பிறரைப் பழித்தல்,  சொல்லாற்  புண்படுத்துதல்,  மரியாதைக் குறைவாய்ப்  பேசுதல்,  பண்டமொருபுரம் இருக்கப்  பழியோருவர்  மேற்  சுமத்துதல் எல்லாம்  வசையாம்.
2 . சினம்:  கோபம்;  இதனால் குணங் கெடும்,  மனங் கெடும், நரம்பு தளரும்,  ஆயுட்  கெடும்,  ஆற்றல்  கெடும்.
3 . வஞ்சம்:  கபடம், சிறுமை,  பொய், கொடுமை, மாயம்,  பிறரை  ஏமாற்றல் வஞ்சனையாம்.
4 . வழக்கு:  பொய் வழக்கு,  வியாஜ்ஜியம்,   வம்பு  இவற்றால்  அமைதி  கெடும்.
5. தீயநசை: துராசை,  காமக்குரோதாதிகள் இவையெல்லாம்  நீங்கவேண்டும்.

இவை  நீங்க  என்ன  வழி?

நாணுறல் :    அடக்கம், கௌரவம், மரியாதை,  விநயம்,  பிறர் பழியும், தன் பழியும்  அஞ்சல்,  நோகாது நோவுறுத்தாது,    பிறர் மனம் சுளிக்காது,  சீர்மையுடன் நடத்தல்.  வெட்டெனப் பேசாமை,  சூதுவாதின்மை,  நாய்ச்சினம்,  நரிவஞ்சம்,  பாம்புச் சீற்றம்,  அகங்கரிப்புகள் இன்றி  பெருந்தன்மை பிடித்தொழுகல் முதலியன நாண் எனப்படும்.  நாகரிகத்தின் நல்லுயிர் நாணே. 

28 அக்., 2010

யோக சித்தி-57: அறநெறி-3

கொலைபுலை,  கூத்தி,  குடிகளவு  சூதாம்
வலுத்த  நரக  வழி.

மனித வாழ்வைத்  துன்பகரமாகக  வழியாவன  ஆறு  இழிநடைகள்:

1. கொலை:  உயிர்க்கொலை  கூடாது.  சீவனைச்  சிவமயமாகக்  கருதவேண்டும்.  அஹிம்சா  விரதமே  அரிய  பெரிய  தருமமாகும்.

2. புலை:   புலாலுண்ணல்,  கொன்றதைத் தின்று  உண்ணல்,  உடலை  வளர்க்கப்  போதுமான  தாவரப்  பொருள்  இருக்கையில்,  பிற  உயிர்களைக் கொன்று  அவற்றின்  ஊனை  உண்ணல்  எவ்வளவு  கொடுமை!

3.  கூத்தி:  வேசையுறவு,  விபச்சாரம்.  தருமபத்திநியுடன்  கூட  இல்லறம்  நடத்த வேண்டும்.  வேசை  என்னும்  மாசு  உலகிற் படராதொழியவேண்டும்.

4.  குடி:  தென்னங்கள்:  ஈச்சங்கள்,  திராட்சைக்கள்,  விஸ்கி,  பிராந்தி,  தேயிலை,  காப்பி,  சுருட்டு  முதலிய  மயக்கப்  பொருட்கள்  நரம்பைத்  தளர்த்தும்.  மனத்  திட்பத்தைக் கெடுக்கும்.  பிணி பல  செய்யும்.

5.  களவு:  மனத்தை,  வாழ்வை,  மானத்தைக் கெடுக்கும் கொடிய பாவம் களவு.  பிறருக்குரியதை  தன்னலத்துடன்  அபகரித்தல்  களவாகும்.

6.  சூது:  சகுனிவலை; சீட்டு,  பகடை,  உழக்குருட்டல்,  குதிரைப்பந்தயம்,  வீண்  போதுபோக்கல்   எல்லாம்  சூதாட்டமே.  வீண் போதுபோக்கல் காலத்தைச்  சூதாடலாகும்.  பொய்வாய்ச்  சூதாகும்.   சீருஞ் செல்வமும், பண்பும், பரிசும்  சூதால்  கெடும்.

இந்த  ஆறு  தீமைகளால்  இருள்  வறுமை,  துன்பம்,  நோய்,  மதிமயக்கம்,  இடர்,  இன்னல்கள்  எல்லாம்  சூழ்ந்து  மனித  வாழ்வை  நரகமாக்கும்.                   

27 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-137:

மதம்  ஒரு  வழி;  முடிவன்று.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-42:

பாசம்போய்  நின்றவர்போல்  பாராட்டி  ஆனாலும்
மோசம்  போனேன்நான்  முறையோ  பராபரமே 

யோக சித்தி-56: அறநெறி-2

அன்புண்மையின்  சொலடக்கம்  பொறுமை  அருள்
இன்பப்  பொதுநெறியென்று  எண்.

எல்லோருக்கும்  பொதுவாக  அறநூல்  சொல்லும்  இன்பவழி:-

1 .  அன்பு :  கடவுலன்பு,  ஆருயிரன்பு.
2 .  உண்மை:  மனசாட்சிக்கு  இசைந்து,  உள்ளத்தில் உண்மை,  வாயில்  வாய்மை,  மெயில்  மெய்ம்மை கொண்டு நடத்தல்
3.  இன்சொல்:  வஞ்சம்,  பொறாமை, கடுமை இல்லாது,  பிறருக்கு  நன்மை தரும்  இனிய சொல், இத மொழி.
4.  அடக்கம்:  செருக்கு, தற்புகழ் இல்லாமல்,  இடம்பம் இல்லாமல், அமைதியாக  அறிந்து  திருவருளைப் பணிந்து நடத்தல்
5.  பொறாமை:  நன்முயற்சிகளில் எத்தனைச் சோதனைகள், இடர்கள் வரினும் வெற்றி தோல்விகளில் வேறுபடாமல் நிதானமாகப் பொறுமையாக நடத்தல், திதீட்சை
6.  அருள்:  எல்லா உயிர்களும் இறைவனும் உடலே என்றெண்ணி  அனைத்திடமும்  எல்லையற்ற கருணையும்,  இரக்கமும், நேயமும் கொண்டு அன்பு செய்தல்;  இறைவன் திருவருளை வேண்டுதல்

இவையே, உலகோர்  உய்யத்  தத்துவப்  பெரியாரும், வித்தகப் புலவரும் பலவாறாகச் சொன்ன உபடேசங்களின் சாரமாகும்.  இவற்றைச் சிந்தித்தொழுகுக.  இவை  விண்ணின்பம்  அளிப்பன.       

26 அக்., 2010

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-11: "சின்னச் சின்ன மழைத்துளிகள்" - படம்: என் சுவாசக்காற்றே



இது மழைக்காலம்.  மழை விட்டுவிட்டுப்  பெய்துகொண்டிருக்கிறது.  தென்மேற்குப் பருவக்காற்று  தொடங்கிவிட்டது.  இனி  மழைதான்  என்று  வானிலை  அறிவிப்பும் வந்துவிட்டது.  இன்று  விஜய்  சூப்பர் சிங்கரில்  ஒரு  அன்பர்  இந்த மழைப்பாட்டைப்  பாடியதும்  மனதில் ஒரு பரவசம்.  இது எனக்குப்  மிகவும் பிடித்த  பாடல்களில் ஒன்று.  உடனே யூடூபில் தேடி  இங்கே பதிவு செய்வதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன்.   அங்கே இருபத்தோராயிரம் பேருக்குமேல்  பார்த்து-கேட்டு  மகிழ்ந்திருக்கின்றனர்  என்பதை அறிந்து கொண்டேன்.

பாடலை அற்புதமாக எழுதிய கவிஞர் வைரமுத்துவிற்கும்,  அதை இனிமையாகப்  பாடிய எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கும், சொக்கவைக்கும் இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானிற்கும், யூடூபில் அதைப் பதிவு செய்த video232342 -விற்கும்,  யூடூபிற்கும்  உளமார்ந்த  நன்றிகள்.     

இன்றைய சிந்தனைக்கு-136:

மனசாட்சியைத்  துறந்தவனிடம்  மதிக்கத்தக்கது  வேறெதுவும்  கிடையாது. 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-41:

வஞ்சனையும்  பொய்யும்  உள்ளே  வைத்தழுக்காறாய்                                                                                               உளரும்
நெஞ்சனுக்கும்  உண்டோ  நெறிதான்  பராபரமே.     

யோக சித்தி-55: அறநெறி-1

விண்ணின்  விரிந்த  வியன்செய்  அறநூலின்
உண்மை  உடுவிற்  பல.

அற்புதமான (வியன்செய்)  அறநூல்  வானினும்  விரிந்தது.  அதிற் காணும் இயலுண்மைகள்  விண்மீன்களை விடப்  பலவாம்.  'உடு'  என்றால்  நட்சத்திரம்.    

25 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-135:

வேண்டாததெல்லாம்   வாங்கிக்குவிப்பவன்,  வேண்டியதைஎல்லாம்  விற்கும்  நிலைக்கு  வருவான்.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-40:

துன்பக்  கண்ணீரில்  துளைந்தேற்குன்  ஆனந்த
இன்பக்  கண்ணீர்  வருவதென்னாள்  பராபரமே.   

யோக சித்தி-54: அறத்தகுதி -5

உள்ளொளியிற்   பூத்த  உயிர்வாழ்வில்  சாதிமதச்
சல்லையிலை  சச்சர  வில்லை.

ஒவ்வொருவர்  உள்ளத்தும்  சுத்தான்மக்கதிர்  நிலவுகிறது.  அதுவே  உள்ளொளி.  அதனின்றே  உயிர்வாழ்வு  மலர  வேண்டும்.    அத்தகைய  வாழ்வே  அத்யாத்ம  வாழ்வு.  அது  சுத்த  சமரச  வாழ்வு.  என்  சாதி,  என்  மதம்  என்ற  மூடப் பிடிவாதங்கொண்டு   தொல்லை  செய்து  உலகிற்  சண்டை  விளைவிக்கும்  சாதிமதப்  பூசல்கள் அத்தகைய  சுத்தான்ம  சமரச  வாழ்விற்கில்லை.  

24 அக்., 2010

சூரியின் டைரி-42: மொழிகளும் உச்சரிப்பும்

இந்த  வார  ஆனந்த விகடனில்  வாலியின், "நினைவு  நாடாக்கள்",  சாரு நிவேதிதாவின்  "மனங்கொத்திப் பறவை" (தொடர்)  மற்றும்  எஸ்.ராமகிருஷ்ணனின்  சிறுகதை, "ஜெயந்திக்கு  ஞாயிறு  பிடிப்பதில்லை"  படித்தேன்,  மகிழ்ந்தேன்.

சாரு நிவேதிதா  மரியோ பர்கஸ் யோசா (Mario Vargas Llosa)   என்ற  நோபல்  பரிசு  பெற்ற  லத்தீன்  அமெரிக்க  எழுத்தாளர்  பற்றி  எழுதியிருந்தார். எழுத்திற்கும், உச்சரிப்பிற்கும்  மாறுபாடான  அந்த  ஸ்பானியப்  பெயரை வாசிக்கச் சிரமப்பட்டிருப்பேன்;  நல்லவேளை,  அவரே  பெயரை  ஆங்கிலத்திலும்,  அதன்  சரியான  உச்சரிப்பைத்  தமிழிலும்  கொடுத்திருந்தார்.  இருப்பினும்  உச்சரிப்பை  உறுதி செய்துகொள்ள  வலையில்  Pronouncenames.com   என்ற  இணையதளத்திற்குச்  சென்று  தேடினேன்.    பயனின்றி, பிறகு  Forwo.com  என்ற  ஆடியோ  வசதியுள்ள  இணையதளத்திற்குச்  சென்று  தேடினேன்.  அது  "மரியோ  பர்கஸ்   ஜோஸா"   என்று  மிகத்  தெளிவாக  உச்சரித்தது.  'ஜான்'  என்ற  பெயரை  'யோவான்'  என்று  உருவேராக்கம் செய்ததுபோல்,   சாரு  'ஜோசாவை'  'யோசா'  என்று  தமிழ்ப் படுத்தியிருக்கிறார்  என்று  புரிந்துகொண்டேன்.  (FORWO.COM  சென்றால்  எந்த  மொழி  வார்த்தையாய்   இருந்தாலும்  அதன்  சரியான  உச்சரிப்பைத்  தெரிந்துகொள்ளலாம்).

என்னைப்  பொறுத்தவரை  மனிதர்களின் பெயர்களை  உருவேறாக்கம்   செய்யவேண்டிய  அவசியமில்லை.  அப்படியே  உச்சரிப்பது,  எழுதுவதன்  மூலம்  நிறைய  குழப்பங்களைத்  தவிர்க்கலாம்.  ஜான்  ஏன்  யோவானாக  வேண்டும்?  மேத்யூ  ஏன்  மத்தேயு  ஆக  வேண்டும்?  ஆனால்  பல  மொழிகளில்  இந்த  மாற்றங்கள்  செய்யப்படுகின்றன.

ஒரு சுருக்கெழுத்தாளன்   என்ற  முறையில்  இந்த  உச்சரிப்பு  மாறுபாட்டை  எப்போதும்  எரிச்சலுடன்  கவனித்து  வந்திருக்கிறேன்.  சுருக்கெழுத்தில்  நாங்கள்  உச்சரிப்பின்  படியே  எழுதுவோம் (Phonetic Spelling).   பின்னர்  தட்டச்சு  செய்யும்போது,  வழக்கில்  உள்ள  ஸ்பெல்லிங்கை  பயன்படுத்துவோம்.  உதாரணமாக,  இருமல் - COUGH ,  சுருக்கெழுத்தில்,  K -O -F.

மொழிகளின்  இந்தக்  குறைபாடுகள்  நிறையப் பேரை  உச்சரிப்பின்படி  எழுதவேண்டும்  என்று  போராடும் உந்துதலைத் தந்திருக்கிறது.  அல்லது  குறைந்த  பட்சம்  இந்தக் குறைபாட்டை  கேலி செய்ய,  சாட  வைத்திருக்கிறது.   உதாரணமாக,  பெர்னார்டு ஷா  'GHOTI '  என்று  எழுதி,  அதை  'FISH '  என்று வாசிப்பாராம்.   அவர் கூறிய விளக்கம்:  'Cough'  என்ற  வார்த்தையில்  இறுதியில் வரும்  'GH',   'ஃப்'  என்றும்,   'WOMEN'  என்ற  வார்த்தையில்  இரண்டாவது  எழுத்தாக வரும்  'O ' ,  'இ'  என்றும்,   'Nation '  என்ற  வார்த்தையில்,  'ti ' என்ற எழுத்துக்கள்  'ஷ்' என்றும் உச்சரிக்கப்படுகின்றன.  ஆகவே  'GHOTI'  என்று  எழுதி  'FISH'  என்று  உச்சரிக்கலாம்.

புகழ் பெற்ற  அமெரிக்க  அதிபர்  தியோடார்  ரூஸ்வெல்ட்  அமெரிக்க  ஆங்கிலத்தை  உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும்  வேறுபாடு  இல்லாத  மொழியாக்க  வேண்டும்  என்று  விரும்பினார்.  அதிகாரபூர்வமாக  இந்த சீர்திருத்தத்தை  அவர்  செயற்படுத்த  முற்பட்டபோது,  கடும்  எதிர்ப்புக் கிளம்ப,  அதைக்  கைவிட்டார்.  இரண்டு முறை  குடியரசுக் கட்சியின் சார்பில்  போட்டியிட்டு  மாபெரும் வெற்றிபெற்ற  அவர்,  மூன்றாம் முறை  போட்டியிட  முயன்றபோது தன் கட்சியின் ஆதரவைப் பெறமுடியாமல்,  சுயேட்சையாக, கலைமான் (Bull Moose)  சின்னத்தில்  போட்டியிட்டுத்  தோற்றார்.  அப்போது  அவரது  பரம  வைரியான  அமெரிக்க  நாளிதழ்  ஒன்று,  அவரது  தோல்வியைப்  பெரிதாக,  "THRU"  என்று  தலைப்பிட்டு  எழுதியது.
         
ஒருகாலத்தில்  எனக்கு  பிற மொழிகளைக் கற்கும்  ஆர்வமும்,  நேரமும்,  வாய்ப்பும்  இருந்தது.  அப்போது  இந்தி,  ஜெர்மன்,  ரஷ்யன்,  பிரஞ்சு  மற்றும்  வங்காள  மொழிகளைக்  கற்க  முற்பட்டேன்.  முதல் மூன்று மொழிகளிலும்  முதற்படியைக் கடந்து,  தேர்ச்சி  பெற்றேன்.  ஆனால் அதன் பின்னர் தொடர முடியவில்லை.

பகவான்  இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும்  சுவாமி  விவேகானந்தர்  மேலுள்ள  ஈடுபாட்டால்,  பாலாஜி  பப்ளிகேஷன்ஸ்  வெளியிட்டிருந்த  'வங்காளம்  கற்போம்'  என்ற நூலை  வாங்கி,  நானே  கற்கமுயன்றேன். சந்தேகம் வரும்போதெல்லாம்  அலுவலகத்தில்  எனக்கு  அடுத்த  அறையில் இருந்த  நண்பர்,  முனைவர் முகர்ஜி  அவர்களிடம்  கேட்டுக்கொள்வேன்.  வங்காள மொழியிலும் உச்சரிப்புப் பிரச்சினை இருந்தது.  அதில்  'வ' மற்றும்  'அ'  என்ற  எழுத்துக்களும்,  ஒலிகளும்  கிடையாது.  'வ'  என்பதை  அவர்கள்  'ப'  என்றும்,  'அ'  என்பதை  அவர்கள் 'ஒ' என்றும் உச்சரிப்பர்.

இந்த விஷயத்தில் பிரஞ்சு மொழி இன்னும்  மோசம்.  பத்து எழுத்துக்களை  எழுதினால்,  அதில்  ஐந்து எழுத்துக்கள் (சமயத்தில்)  உச்சரிக்கப் படுவதில்லை, அவை Silent என்பதால்.  வார்த்தையின்  இறுதியில்  வரும்  'S '  மற்றும்  'T'  அந்த மொழியில்  உச்சரிக்கப் படுவதில்லை.

ஜெர்மானிய  மொழி  ஓரளவிற்கு  'Phonetic '  மொழிதான்.  ஆனால்  பிரஞ்சு  மொழியைப்  போல  'definite article '  (the) மற்றும்  indefinite article   (a , an) தொடர்ந்து வரும்  வார்த்தையின்  பாலைப் பொறுத்து   (Gender)   'der' (ஆண்பால்), 'die ' (பெண்பால்  மற்றும்  பலவின்பால்) ,  'das' (அஃறிணை)  என்று  மாறுபடும்.  அதுவும் வேற்றுமை உருபுகளைப்  பொறுத்து  'dem ', 'den '  என்று  மேலும்  மாறுபடும்.  சுருங்கச் சொன்னாள்  ஜெர்மன் மொழி இலக்கணம்  ஆளைக் கொன்றுவிடும்.  ஜெர்மானிய அறிஞர்  மாக்ஸ் முல்லர்  உலகிலேயே  ஜெர்மானிய மொழி போல்  உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும்  மாறுபாடு இல்லாத - PHONETIC LANGUAGE -  நேர்த்தியான  மொழி  கிடையாது  என்று  பெருமையுடன் எண்ணியிருந்தார்.  உலகிலேயே  இந்த வகையில்  நேர்த்தியான, முழுமையான  மொழி  சமஸ்கிருதம்  (A Perfect Phonetic Language) என்பது நிறைய பேருக்குத் தெரியாது.  (சுயநலத்தினாலும்,  அதன் சிறப்பு சிதைந்துவிடக் கூடாது  என்ற  பயத்தினாலும்  அந்த  மொழி  மூடி மறைக்கப்பட்டது.  சாதாரண மனிதர்கள்  அதைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.  அதனால் அந்த  மொழி  இன்று  அழியும் நிலையில் உள்ளது.)

சம்ஸ்கிருத மொழியைப் பற்றி அறிந்த பின், அதன் மேல் ஈடுபாடு கொண்டு,  மாக்ஸ் முல்லர்  அதை  முறைப்படி  கற்றுக்கொண்டார்.   வேதங்களையும்,  உபநிடதங்களையும்  பயின்றார்;  பிரமித்துப் போனார்.  மொழியின் அருமையையும்,  இந்திய  சிந்தனைகளின்  மேன்மையையும்,  அற்புதத்தையும்  வியந்து  போற்றினார்.  தமது  நூல்கள் மூலம்  இந்தியச் சிந்தனைகளின் மேன்மைகளை  உலகறியச்  செய்தார்.  ஒரு மிகச் சிறந்த  INDOLOGIST   ஆக  விளங்கினார்.  சென்னையிலுள்ள  ஜெர்மானியத் தூதரகம்  'மாக்ஸ் முல்லர்  பவன்'  என்று  பெயரிடப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருத  மொழியின்  இந்த  முழுமைத் தன்மை,  சிறப்புத் தன்மை காரணமாக,  எழுத்துக்களே  இல்லாத  காலம் தொட்டு  இன்று வரை  நமது  ஆன்மிகப்  பொக்கிஷங்கள்  -  வேதங்கள்,  உபநிடதங்கள் - வாய் மொழியாகவே  தலைமுறை  தலைமுறையாக  மனனம் செய்யப்பட்டு,  சிதையாமல்  காக்கப்பட முடிந்தது என்ற பேருண்மையை  இங்கே  குறிப்பிட்டாக வேண்டும்.  சிந்தித்தால்  இது  எவ்வளவு  பிரமிப்பான விஷயம்  என்று  புரியும்.  லட்சக்கணக்கான  சொற்றொடர்களை  ஒலி  சிதையாமல்,  வார்த்தைகள்  இடம்  பிறழாமல்  மனனம் செய்து  மனத்தில்  பதிவு  செய்துகொண்டு,  அதை  அடுத்த தலைமுறை,  அதற்கடுத்த தலைமுறை  என்று  காப்பாற்றி  வந்திருப்பது  சாதாரண  விஷயமல்ல.

மனிதர்களுடைய  குறைபாடுகள்  (Imperfections)  அவர்களது மொழிகளையும்  பற்றிக்கொள்வதில்  வியப்பொன்றுமில்லை.  மொழி மட்டுமல்ல,  வேறு எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும்  முழுமை (Perfection)  என்பது  ஒரு  இலக்கு  அல்லது  வெறும்  கனவு  என்றுதான்  நினைக்கிறேன்.  அதனால்தான்  என்னவோ  எனது  இடதுசாரி  நண்பர்கள்  "NOTHING   ABSOLUTE "  என்கிறார்கள் போலும்.        

இன்றைய சிந்தனைக்கு-134:

மகிழ்ச்சி   பொருட்களில்லை.  அது  நம்  மனதில்தான்  இருக்கிறது. 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-39:

ஐயோ  உனைக்காண்பான்  ஆசைகொண்ட  தத்தனையும்
பொய்யோ  வெளியாப்  பகராய்  பராபரமே.  

யோக சித்தி-53: அறத்தகுதி -4

உலகோர்  அருட்குலமாய்  ஒன்றி  இனிதோங்கு
நலமார்  போதுநிலையை  நாட்டு.

இறைவன் தந்தை;  அவனருளே  தாய்;  உயிர்கள்  அவனருள்  மைந்தர்.  இவ்வாறு  உலகமெல்லாம்  ஒரு  அருட்குலமாக,  தெய்வஜாதியாக  ஒற்றுமைப்பட்டு,  மன்க்கலாமாகச்  செழித்தோங்க  வேண்டும்.  அதற்கேற்ற  பொதுநிலை  வாழ்வை  சர்வாத்ம  சமரச  உணர்ச்சி  கொண்டு  நிலைநாட்டுக.   அதனால்  எல்லா  நன்மையையும்  உண்டாகும்.  

23 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-133:

மகிழ்ச்சி  சுறுசுறுப்பில்  உள்ளது.  அது  ஓடும்  நதி,  குட்டையன்று.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-38:

கற்றஅறிவால்  உன்னைநான்  கண்டவன்போல்  கூத்தாடிற்
குற்றமென்றென்   நெஞ்சே  கொதிக்கும்  பராபரமே.   

யோக சித்தி-52: அறத்தகுதி -3

சோர்வு  விடுத்துச்  சுயேட்சை  அடைந்துலகில்
வீரனாய்  வாழ  விரும்பு.

மனத்தளர்வை  நீக்கு.   எல்லாக்  கட்டுக்களினின்றும்  விடுதலை பெறு.  இந்த  உலகில்  வீரனாக,  ஆத்ம  தீரனாகப்  பலருக்கும்  பயன்பட  வாழ  விரும்பு.

21 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-132:

ஒழுக்கமென்ற   படிகளில்  ஏறினால்தான்  ஒடுக்கமென்ற  தெய்வீக  மாடியைப்  போய்ச்  சேர முடியும்.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-37:

ஆழித்  துரும்பெனவே  அங்குமிங்கும்  உன்அடிமை
பாழில்  திரிவதென்ன  பாவம்  பராபரமே.    

யோக சித்தி-51: அறத்தகுதி -2

உண்டு  உடுக்க  உவந்திருக்க  நன்முயற்சி
பண்ணல்  அறவாழ்வின்  பண்பு.

மனிதன்  முதலில்  சரீர  தருமத்தைக்  கவனிக்கவேண்டும்.  உண்ண,  உடுக்க,  இருக்கப்  போதுமான  உணவு, உடை,  மனை  முதலிய  சௌகரியங்களை  நல்ல  யோக்கியமான  தொழிலின்  முயற்சி  செய்து  பெறவேண்டும்,.  இது,  அறவழி  வாழ்வின்  மாண்பாகும்.
 
 

20 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-131:

அரசு  வியாபாரம்  செய்தால்  மட்டமான  சரக்குதான்  கிடைக்கும். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-36:

எண்ணாத   எண்ணமெலாம்  எண்ணிஎண்ணி  ஏழைநெஞ்சம்
புண்ணாகச்  செய்ததினி  போதும்  பராபரமே.    

யோக சித்தி-50: அறத்தகுதி -1

போக்கும்  வரவும்  பொழுதும்  அறியோமதனால்
யாக்கை  யோடே  செய்யறம்.

இவ்வுடலிற்   புகுந்த  ஆன்மா  எப்போது  இதை  விட்டுப்  போகும்,  வேறு  எந்த  உடலுடன்  மீண்டு  வரும்  என்று  நாம்  அறியோம்.   இந்த  உடல்  உள்ளபோதே  நல்ல  அறவினைகளைச்  செய்க. 

17 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-130:

வீண்  பேச்சும்  பொய்யும்  நண்பர்கள். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-35:

கன்றினுக்குச்   சேதா   கனிந்திரங்கல்  போலஎனக்
கென்றிரங்கு   வாய்கருணை  எந்தாய்  பராபரமே.  

யோக சித்தி-49: அறவிரிவு -5

எதுதீதென  நோக்கி  எள்ளற்க;  நன்மை
அது  போற்றல்  ஆற்றலறிவு.

நம்மைத்  தொடர்ந்த  மனித  மனித  சமுதாயத்தினிடம்  நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்?  பிறரிடம்  எது  கெடுதல்  என்று  நோட்டம்  பார்த்து,  குட்ட்ரமே  பாராட்டி  அவர்களை  இகழக்கூடாது.  பிறரிடம்  எது  நன்மை,  எது  உத்தமமான  குணம்  என்று  கவனிக்கவேண்டும்.  அதை  நாமும்  பேணி,  அதன்படி  செய்து,  நன்மை  பெறுதலே  அறிவாகும்.         

16 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-129:

சோம்பல்    ஏழ்மைக்கு  வித்து.

தாயுமானவரின் பராபரக்கண்ணி-34:

உள்ளம்  அறிவாய்  உழப்பறிவாய்  நான்ஏழை
தள்ளிவிடின்  மெத்தத்  தவிப்பேன்  பராபரமே.   

யோக சித்தி-48: அறவிரிவு -4

தொடர்ந்தாரின்  துன்பம்  துடைக்காத  செல்வன்
கடமை  வழுவியோன்  காண்.

நாகரிகம்  பெற்ற  செல்வன்,  சுகபோகங்களைச்  சுயனலத்திர்கே  பயன்படுத்தாது,  தன்னைத்  தொடர்ந்த,  தன்னினமான,  மாந்தரின்  துன்பத்தைத்  துடைக்கப்  பயன்படுத்தவேண்டும்.  அவர்களுக்குற்ற  இடர்களைத்  தன்னால்  இயன்ற  மட்டும்  தவிர்க்கவேண்டும்.  இன்றேல்,  அவன்  தனக்குரிய  கடமையினின்று  வழுவியோனாவன்.    

14 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-128:

ஆணவத்தின்  நொண்டிக் குழந்தையே  பொறாமை. 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-33:

கடல்அமுதே  தேனேஎன்  கண்ணே  கவலைப்
படமுடியாது  என்னைமுகம்  பார்நீ  பராபரமே.   

யோக சித்தி-47: அறவிரிவு -3

மோகரிகம்  இன்றி,  முரணற்ற  முன்னேற்றம்
நாகரிகம்  என்றே  நவில்.

நாகரிகம்  என்றால்  என்ன?  மோகரிகம், மனமயக்கம்  இல்லாது,  ஒருவொருக்கொருவர்  முரண்பட்டு,  மாறுபட்டுப்  போட்டி  பொறாமைகளால்  பகைத்துப்  போராடாமல்,  மனித  சமுதாயம்  ஒன்றுபட்டு,  அன்பிலும்  அறிவிலும்  ஆன்ம  உணர்விலும்  வளர்ச்சி  பெரும்  முன்னேற்றமே  நாகரிகம்  என்று  சொல்லுக.   

13 அக்., 2010

சூரியின் டைரி-41: சிற்றிதழ்கள்

சிற்றிதழ்களின்    அரிய இலக்கிய  சேவை  பற்றி  இந்தவலைப்பூவில்  ஏற்கனவே  பதிவு செய்துள்ளேன்.  தமிழ்மணியில்  கலாரசிகன்  அவர்கள்  'புதிய  ஆசிரியன்'  பற்றி  எழுதியதை  அப்படியே   பதிவு  செய்திருந்தேன்,  அவரது  கருத்துக்கள்  என்  உணர்வுகளை  அப்படியே  பிரதிபலிப்பதாக  இருந்ததால்.  சிற்றிதழ்கள்  பற்றி  நிறைய  எழுதலாம்.  என்னுடைய  சொந்த  அனுபவத்திலிருந்து  சிலவற்றை  இங்கே பதிவு செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.

காரைக்குடி  புத்தகத்  திருவிழா  நடத்துவதில்  முக்கிய  பொறுப்பு முதல் நான்கு  ஆண்டுகள்  என்வசம்  இருந்தது.  அந்தகால கட்டத்தில்  சிற்றிதழ்களுக்கென்று  ஒரு  கண்காட்சியோ  மாநாடோ நடத்த பெரிதும்  விரும்பினேன்.  ஆனால்  பல  தடைகள்,  சிரமங்கள்.  அப்போது  நண்பர்,  கவிஞர்  ஜனநேசன்  அவர்கள்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவின்  ஒரு  பகுதியாக  சிற்றிதழ்களின்  கண்காட்சியை  நடத்தலாம்  என்று  ஆலோசனை  கூறினார்.  அதன்படி  2005  ஆண்டு  காரைக்குடி  புத்தகத் திருவிழாவுடன்  சிற்றிதழ்  கண்காட்சியையும்  இணைந்து  நடத்தினோம்.  ஒன்பது நாட்கள் நடைபெற்ற  புத்தகத்  திருவிழாவின்  ஒவ்வொரு  நாளையும்  ஒவ்வொரு  சிறப்பு தினமாக நடத்தும் பழக்கத்தை  வைத்திருந்தோம்.  (ஆசிரியர் தினம்,  மாணவர் தினம்,  மகளிர் தினம்,  சாதனையாளர் தினம்,  அறிவியல் தினம்  என்று).  அந்த  ஆண்டு  ஒருநாளை  'சிற்றிதழ்  தினமாகக்'  கொண்டாடினோம்.

திரு  பொள்ளாச்சி  நசன்  அவர்களைத் தொடர்பு கொண்டு,  அவரை  அன்று  சிறப்பு விருந்தினராக  கலந்து கொள்ள  அழைத்திருந்தோம்.  அவரும்  இசைவு தெரிவித்து,  சிற்றிதழ்களின் முகவரிகளையும் கொடுத்து உதவினார்.  நாங்கள்  அந்த முகவரிகள் அனைத்திற்கும் அழைப்பு அனுப்பினோம்.  எதிர்பாராதவிதமாக  சிற்றிதழ்களின்  மாநாடு  அதே நாளில்  தமிழகத்தின்  வேறு  பகுதியில்  நடைபெற்றதால்  பலர் கலந்துகொள்ள முடியவில்லை.  திரு பொள்ளாச்சி  நசன்  அவர்களும் வரமுடியவில்லை.  இருப்பினும்  கிட்டத்தட்ட  முப்பதிற்கும்  மேற்பட்ட  சிற்றிதழ்கள்  அதில் கலந்துகொண்டன.  'திசை எட்டும்'  மொழிபெயர்ப்பு மாத இதழின்  ஆசிரியரான  திரு  குறிஞ்சி  வேலன்  அவர்கள்  அன்று  சிறப்பு  விருந்தினாராகக் கலந்துகொண்டு  மகிழ்வித்தார்கள்.   சிற்றிதழ் கண்காட்சி மிகச்  சிறப்பாக  அமைந்தது.  ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  அவற்றைப்  பற்றி  அறிந்துகொள்ளும்  வாய்ப்பும்  கிடைத்தது.  வந்திருந்த சிற்றிதழ்களின்  பிரதிநிதிகளும்  மகிழ்ச்சியையும்  நன்றிகளையும்  தெரிவித்து  விடைபெற்றனர்.  மறக்க முடியாத  ஒரு  அனுபவமாக  அது  அமைந்தது.  நண்பர் கவிஞர் ஜனநேசன் அவர்களுக்கும், உதவிய மற்ற அன்பர்களுக்கும், ஆர்வத்தோடு கலந்துகொண்ட சிற்றிதழ்களுக்கும்  எனது மிகத் தாமதமான  நன்றிகள்.  Better late than never!

நிறைய  சிற்றிதழ்கள் விற்பனையாகின.  என்  பங்கிற்கு  நானும்  சிறிது வாங்கினேன்.  பல  அன்பர்கள்  அன்பளிப்பாகத்  தங்கள்  சிற்றிதழ்களை  எனக்கு  பேரன்புடன்  வழங்கினர்.  அலுவலகத்திலும் சரி,  பொது வாழ்விலும்  சரி,  குடும்பத்திலும்  சரி,   குருவி  தலையில்  பனங்காய்  என்பதுபோல்  எனக்கு  நிறைய சுமைகள், பொறுப்புகள்;  பேராசையால்  அளவிற்கு மேல்  எடுத்துப்  போட்டுக்கொண்டு செயல்படும்போது, சிலவை  பின்னர்  பார்த்துக் கொள்ளலாம்  என்று  விடுபட்டுப்  போய்விடும்.  அப்படி  விடுபட்டுப்போன  ஒன்றுதான்  இந்தச்  சிற்றிதழ்களைப்  படித்து  அவர்களுக்கு  எனது  நன்றிகளையும்,  கருத்துக்களையும்  தெரிவித்துகொள்வதும்.  மேலும்  சில  இதழ்கள்  பார்த்த  மாத்திரத்திலேயே  என்னைப்  பெரிதும்  கவர்ந்தன.  அவைகளுக்கு  எனது  சந்தாவை  அனுப்பி  அவைகளுக்கு  ஆதரவு  தெரிவிப்பதுடன்,  அவற்றை  படித்து  இன்புறவும்  செய்யலாம்  என்று  நினைத்திருந்தேன்.  இன்றுவரை  அதில்  எதுவுமே  நடைபெறவில்லை.  ஆனால்  கலந்துகொண்ட  சிற்றிதழ்கள்  பல  நன்றிக்கடிதம்  எழுதின,  தங்கள்  இதழில்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவைச்  சிலாகித்து, எனக்கு  நன்றி  கூறி  கருத்துக்களை  வெளியிட்டிருந்தனர். இத்தனை  ஆண்டுகளுக்குப்பின்  பெட்டி  பெட்டியாக  நான்  சேர்த்து  வைத்திருந்த  புத்தகக்  குவியல்களையும்,  இதழ்களையும்,  மற்ற  ஆவணங்களையும்  பிரித்தெடுக்கும்போது  அந்த  சிற்றிதழ்களில்  சில  வெளிவந்தன.  அவற்றை  பிரித்துப்  படிக்கும்போது  மனம்  கனத்தது,  நெஞ்சில் நெருஞ்சிகள்  உறுத்தின.  திருநாளைப்போவாராக வாழ்ந்திருக்கிறேன், எப்படிப்பட்ட  வாய்ப்புக்களை  இழந்திருக்கின்றேன்  என்று  வேதனைப்படுகிறேன்.  இருக்கட்டும்.  அந்த  இதழ்களில்  ஒன்றான  'காளான்'  என்ற  ஒரு  அற்புதமான  இதழ்  பற்றி  பின்வரும்  நாட்களில்  பதிவு  செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.           

இன்றைய சிந்தனைக்கு-127:

அறிவாளிக்கும்  முட்டாளுக்கும்  என்ன  வித்தியாசம்?  அறிவாளி  தன்  தவறை  உணர்ந்து  தன்னைத்  திருத்திக்  கொள்வான். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-32:

கூர்த்த  அறிவத்தனையும்  கொள்ளைகொடுத்து  உன்னருளைப்
பார்த்தவன்நான்  என்னைமுகம்  பாராய்  பராபரமே.     

யோக சித்தி-46: அறவிரிவு -2

பழமை  பழமையெனும்   பல்லவியே  பாடேல்;
புதுமை  புதுமையெனப்   போ.

'இது  பழைய  வழக்கம், பழைய  ஆசாரம்,  முன்னோர்  வகுத்தது'  என்று  திருப்பித் திருப்பி  பல்லவி  பாடிக்கொண்டு  காலமுன்னேற்றத்தின்  குறுக்கே  நில்லாதே.  'புதுமை,  புதுமை,  புதுவாழ்வு,  புதுநினைப்பு,  புதிய  சுயேச்சை  வேண்டும்'  என்று  சொல்லி  முன்னேறிச்  செல்.
 

12 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-126:

ஒழுக்கமுள்ள  இடத்தை  கடவுள்  தேடி  வருவார். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-31:

ஓகோ   உனைப்பிரிந்தார்  உள்ளம்  கனலில்வைத்த
பாகோ  மெழுகோ  பகராய்  பராபரமே.   

யோக சித்தி-45: அறவிரிவு -1

அதேது  காலத்திற்  கேற்றபோது  நன்மையதை
வாதின்றி  யாற்றி  மகிழ்.

நல்வினை  செய்வதில்  காலத்தையும்  கருதவேண்டும்.  காலத்திற்கேற்ற  பொதுநலம்  எது எது  என்று  தோன்றுகிறதோ,  அத்தை  வீன்வாதங்களில்  பொழுது  போக்காமல்  நிறைவேற்றி  இன்புறுக.   

11 அக்., 2010

இன்றைய சிந்தனைக்கு-125:

பொறாமையென்னும்  வயலில்  விளைவது  துக்கம் . 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-30:

ஓயாதோ  என்கவலை  உள்ளே  ஆனந்தவெள்ளம்
பாயாதோ  ஐயா  பகராய்  பராபரமே.   

யோக சித்தி-44: அறம்-5

இறந்தபின்  எப்படியோ  இக்கண்  உலகிற்
சிறந்த  திருவினையைச்  செய்.

உடல் பிரிந்தபின்,  ஜீவா  யாத்திரை  எப்படியோ,  அது  எங்கே  செல்லுமோ,  அது  ஏக்கதியாமோ,  எவ்வுடளிர் புகுமோ,  நாம்  உறுதியாக  அறியோம்.  இதோ,  கண்ணார்  காணும்  இடமகன்ற  உலகம் உள்ளது.  அதில்  மேலான  திருவினைகளை,  சுபகாரியங்களை,  அறைனைகளை செய்க.   

5 அக்., 2010

சூரியின் டைரி-33: வள்ளலார் பிறந்ததினம்

இன்று 2010-ம் வருடம் அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள்.  இன்று பிரதோஷம்.  ஊரிலிருந்தால் நகர சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டிருப்பேன்.  இங்கு சென்னையில் நான் இருக்கும் இடத்திலிருந்து  சிவன் கோவில் தேடி அலைய முடியாது.  மேலும் நாளை ஊர் கிளம்பியாக வேண்டும்.  வேலைகள் நிறைய முடித்தாக வேண்டும்.

அடுத்து இன்று வள்ளலார் பிறந்ததினம் என்று நாட்காட்டி கூறுகிறது.  வள்ளலார் என்ற அந்த சொல்லைப் பார்த்ததும் மனமெல்லாம் நெகிழ்கிறது.  வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளல் அல்லவா அவர்!  

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி 
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!


தம்பி நெல்லையப்பனுடன் ஒருமுறை வடலூர் சென்றிருந்தேன்.  அங்கு தொடர்ந்து  ஒலித்த மேலே உள்ள மந்திரம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது.  அங்கே ஒருவர் திருவருட்பாக்களை நெக்குருகப் பாடினார்.  காதில் தேன் பாய்ந்தது.  அங்கே குறிப்பிட்ட பகுதி  தாண்டி செல்ல புலால் உண்ணாதவர்க்கே அனுமதி என்றார்கள்.  அன்றே நினைத்தேன் புலால் உண்பதை நிறுத்தவேண்டுமென்று.  ஆனால் முடியவில்லை.


சில மாதங்களுக்கு முன் திருப்போரூர் சென்றிருந்தபோது,  வள்ளலார் அடிபற்றி வாழும் மகான் ஒருவரை அங்கு கண்டேன்.  அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே புலால் உண்பீர்களா என்பதுதான்.  அந்த நிமிடமே இனி புலால் உண்பதில்லை என்று முடிவெடுத்தேன்.  இறையருளால் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன்; இனியும் இருப்பேன் என்று நம்புகிறேன்.


வடலூர் பற்றியும், வள்ளலார் பற்றியும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை என் அரைகுறை நினைவிலிருந்து இங்கே பதிவு செய்கின்றேன்.  


வடலூரில் தைப்பூச ஜோதி கண்டேன் - அங்கே
வள்ளலார் ஏற்றிவைத்த நீதி கண்டேன்.


வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளல் கண்டேன்
தேடிய கருணை கண்டேன்
தெய்வத்தின் காட்சி கண்டேன் 
பாடிடும் அருட்பாவில் நெஞ்சமே உருகக் கண்டேன்
நாடிடும் அன்பர்க்கெல்லாம் நலமே பெருகக் கண்டேன்


ஏழுகால பூஜையிலே என்னையே நான் மறந்தேன்
ஏழுதிரை விலகிடவே இன்பமே நானறிந்தேன்.
சூழ வந்த வினைகளெல்லாம் ஓடுகின்ற மாயம் கண்டேன்
சுடர் விடும்  மெய்ப்பொருளாய் ஜோதிஎனும் தீபம் கண்டேன்.


குறைந்த பட்சம் இன்று முழுக்க யார் மீதும் கோபம் கொள்ளக்கூடாது, காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது,  யாரையும் வெறுக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டேன்.  ஆனால் காலையில் செய்தித்தாளை எடுத்ததும் அதற்குச் சோதனை வந்தது.  அரசியல்வாதியின் மகன் ஒருவன் அரசுப் பேருந்து ஊழியர் ஒருவரை அடித்ததாகவும்,  அதையடுத்து பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததாகவும் அதனால் மக்கள் அவதிக்குள்ளானதகவும்  செய்தி.  வள்ளலாரை நினைந்து  ஒருவாறு மனச் சமாதானம் செய்துகொண்டு,  ஆத்திரத்தை கைவிட்டேன்.   இன்று முழுவதும் இயன்றவரை அந்த மகானை, கருணையின் திருஉருவை,  நினைவில் கொண்டு செயல்படுவேன்.